திரிசூலம், அனகாபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்தநிலை கல்குட்டைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: தடுப்பு அமைக்க வலியுறுத்தல்

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளான மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திரிசூலம் ஆகிய பகுதிகளில் உள்ள மலைகளில் ஒரு காலத்தில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வந்தன. அவற்றில் சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் அடி ஆழம் வரை கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன. தற்போது அவற்றில் பெரும்பாலான மலைகளில் குவாரிகள் கைவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த கல்குவாரி குட்டைகளில் மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சியளிக்கின்றன. ஆண்டுதோறும் இதில் குளிக்க உள்ளே இறங்கி, ஆழத்தில் சிக்கி பலர் இறந்து வருகின்றனர். பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்களே இதில் அதிகளவில் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, கோடை காலங்களில் நண்பர்களுடன் குழுவாக இங்கு வரும் இளைஞர்கள் ஆர்வ மிகுதியில் ஆபத்தை உணராமல் கல்குவாரி குட்டையில் இறங்கும் போது, இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அதுமட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளில் தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்களின் முதல் தேர்வாகவும் இந்த கல்குவாரி குட்டைகள் உள்ளன.

மேலும், வேறு எங்காவது கொலை செய்து விட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க, உடலை இங்குள்ள கல்குவாரி குட்டையில் வீசிச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் கல்குவாரி குட்டைகள் அனைத்தும் திறந்த நிலையில் இருப்பதும், ஆபத்து குறித்து அரசு சார்பில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்படாமல் இருப்பது தான், என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இங்குள்ள கல்குவாரி குட்டையில் தேங்கியுள்ள நீரை எவ்வாறு மீண்டும் பயனுள்ளதாக மாற்றலாம் என்று தமிழக அரசு முயற்சி செய்து, கோடை காலத்தில் சிக்கராயபுரம் போன்ற கல்குவாரி குட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து சென்னை மக்களின் தாகம் தீர்த்து வருவது வரவேற்கத்தக்கது. அதுபோலவே, இந்த கல்குவாரி குட்டைகளை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து, பொதுமக்கள் நுழைய அனுமதி மறுப்பதுடன், அதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் ஆங்காங்கே எச்சரிக்கை  பதாகைகளும் வைக்க வேண்டும்.

இதன் மூலம் உயிரிழப்புகள் தடுக்கப்படுவதுடன், நீரும் மாசுபடாது. நீர் வளம் காக்கப்படுவதுடன், கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்கும் வரப்பிரசாதமாக இந்த கல்குவாரி குட்டைகள் அமையும். எனவே, பெருகி வரும் உயிரிழப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: