பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிப்பட்டு வட்டத்தில்  33 ஊராட்சிகள், இருண்டு பேரூராட்சிகளிலிருந்து  80 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் ஆதார் சேவைகளுக்காக பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள  ஆதார் சேவை மையத்தை நாடுகின்றனர். புதிய ஆதார் கார்டு, பெயர் மாற்றம்,  திருத்தம்  போன்ற பணிகளுக்காக தினமும் குழந்தைகள், முதியோர், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர்   காலை  6 மணிக்குள் வட்டாட்சியர் அலுவலகம் வந்து காத்திருக்கின்றனர்.

 இருப்பினும்  காலை 9 மணிக்கு வரும் ஆதார் மைய கணினி இயக்கும் தற்காலிக ஊழியர் முன் உரிமை அடிப்படையில் முதல்  40 பேருக்கு  மட்டுமே  டோக்கன் வழங்குகிறார். இதனால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. பலமணி நேரம் வரிசையில் காத்திருந்தாலும் போன் தகவலின் பேரில் டோக்கன் எடுத்துவைத்திருந்ததாக கூறி   ஒரு சிலருக்கு  உடனடியாக வேலை முடித்து தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 மேலும்  ஆதாரில் பெயர், வயது திருத்தம்  செய்ய  உரிய அதிகாரிகளிடம் சான்று பெற்று வந்தாலும் முறையாக இல்லை என்று கூறி பல மணி நேரம் காத்திருந்தவர்களுக்கு பதிவு செய்யாமல் நிராகரித்து திருப்பி அனுப்பவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களை அலைக்கழிப்பு செய்வதை தடுத்து  ஆதார் மையத்தை நாடுபவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பணியாளர் நியமிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: