திருநின்றவூர் ரயில் நிலையம் தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல்

ஆவடி: திருநின்றவூர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று திருநின்றவூர். 11 சதுர கி.மீ. சுற்றளவுள்ள திருநின்றவூர் பகுதியில் சுமார் 1.5 கி.மீ. நீளம் கொண்டது. இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள், 6 இருப்பு பாதைகள் உள்ளன. இதில் மின்சாரரயில் சென்றுவர 2 இருப்புப்பாதை, விரைவு ரயில் சென்று வர 2 இருப்புப்பாதை மற்றும் 2 லூப் இருப்பு பாதைகள் உள்ளன.

இந்த ரயில் நிலையத்தை, பாக்கம், பாலவேடு, கோமதிபுரம், நடுக்குத்தகை, காலனி, கொசவன்பாளையம், கொட்டாமேடு, புதுச்சத்திரம், திருமழிசை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த சுமார் 60 ஆயிரம் மேற்பட்ட மக்கள் தினமும் பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் நிலையத்தின் மாத பயணச்சீட்டு வருமானம் ரூ.26 லட்சம், மற்றும் சீசன் டிக்கெட் வருமானம் ரூ.1.20 கோடில் இருந்து ரூ.1.46 கோடியை தாண்டுகிறது. ஆனாலும் இந்த ரயில் நிலையம் இன்னும் தரம் உயர்த்தப்படாமல் ‘டி’ கிரேடு ரயில் நிலையமாக தான் உள்ளது. ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் இருந்த பயணச்சீட்டு வழங்கும் இடத்தை, 2016 இல் நடைமேம்பாலத்தில் மாற்றப்பட்டது. இதனால், வயதானோர் பயணச்சீட்டு வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்த ரயில் நிலையத்திற்கு பொதுவான முகப்பு வாயில் இல்லாததால், அன்றாடம் இருப்பு பாதைக்கு ஓரமாக உள்ள தடுப்புகளை திறந்து கொண்டு ரயில் பிடிக்க பொதுமக்கள் ஓடுகின்றனர். இதனால் ஒரு மாதத்தில் மட்டும் 5 க்கு மேற்பட்டோர் இறப்பது வாடிக்கையாகிவிட்டது. அதுமட்டுமின்றி, மாலை நேரங்களில் ரயில் நிலையத்தின் 3வது நடைமேடை என்பது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

மாலை நேரங்களில், காதலர்களின் பூங்காவாக, கஞ்சா போதை பயன்படுத்துபவர்களின் கூடாரமாக உள்ளது. ரயில் நிலையத்தில் கழிப்பறை குடிநீர் மற்றும் கண்காணிப்பு கேமராவசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனே நாள்தோறும் பயணம் செய்கின்றனர். எனவே திருநின்றவூர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி, சமூகவிரோதிகளின் பிடியிலிருந்து மீட்க வேண்டும் என்ற ரயில் பயணிகளின் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: