மதுராந்தகம் உழவர் சந்தையில் விற்பனையை உயர்த்த வேண்டும்: மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வலியுறுத்தல்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நேற்று இதனை நேரில் பார்வையிட்டு, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் தே.சாந்தா செலின் மேரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் அனைத்து கிடைக்கும் வகையில், உழவர் சந்தையில் விற்பனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென   வலியுறுத்தினார்.

 மேலும், நிர்வாக அலுவலர் மற்றும் வட்டார தோட்டக்கலை அலுவலர்கள் ஆகியோரிடம், தற்போது  உழவர் சந்தைக்கு எத்தனை விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து வருகிறார்கள்?,அவற்றின் அளவு எவ்வளவு? என்று கேட்டறிந்து, இந்த சந்தைக்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் வரத்தை அதிகரிக்க, உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு  விழிப்புணர்வு முகாம் நடத்தி, விவசாயிகளின் விளைபொருட்களை அதிகமான அளவு சந்தைக்கு எடுத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

தோட்டக்கலை துறையின் மூலமாக நடப்பு நிதியாண்டில் இருந்து( 2022-23) உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் ஊக்க தொகையாக ஏக்கருக்கு ₹8000/- வழங்கும் திட்டத்தை விவசாயிகளுக்கு எடுத்து கூறி, அவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை உழவர் சந்தையில் விற்பனை செய்ய அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக, இப்பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்யாத இதர காய்கறிகள், பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய, அவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மதுராந்தகத்தை சேர்ந்த பொதுமக்கள் உழவர் சந்தை மூலம் கிடைக்கும் நன்மைகளை அறியும் வகையில் முக்கிய இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைத்து, துண்டு பிரசுரம் வழங்க வேண்டும். இந்த ஆய்வின்போது, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சாகுல் ஹமீது,உதவி தோட்டக்கலை அலுவலர் பாலகுமார் மற்றும் வேளாண் விற்பனை துறையை சார்ந்த உதவி வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: