சென்னை புறநகர் பகுதிகளில் பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள்: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் சிக்கல்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்களை மீண்டும் திறக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளான நந்தம்பாக்கம், பரங்கிமலை, ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக, பொதுமக்களின் பங்களிப்போடு முக்கிய சந்திப்பு பகுதிகளில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றை, உயர் அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

அதன்படி, ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் சிசிடிவி கேமரா மற்றும் மானிட்டர் வசதியுடன் கூடிய காவல் உதவி மையம், சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. இங்கு, போலீசார் பணியில் ஈடுபட்டதன் காரணமாக குற்றங்கள் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இந்த காவல் உதவி மையம் பூட்டியே கிடக்கிறது. இதேபோல், ஆதம்பாக்கம் நேதாஜி காலனியில் அமைக்கப்பட்ட காவல் உதவி மையம், பழவந்தாங்கலில் 2 காவல் உதவி மையங்கள், மடிப்பாக்கம் காவல்நிலைய காவல் எல்லைக்குட்பட்ட மேடவாக்கம் சாலையில் உள்ள காவல் உதவி மையம், மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள காவல் உதவி மையம் போன்றவை திறக்கப்படாமல் பல நாட்களாக மூடியே கிடைக்கிறது.

இதன் காரணமாக, மேற்கண்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு, வழிப்பறி, போதைப் பொருள் விற்பனை, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மடிப்பாக்கம் ராம்நகர் காவல் உதவி மையம் அருகே பைக்கில் அதிகாலையில் சென்ற ஒரு வாலிபரை மிரட்டி மர்ம நபர்கள் வழிபறியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

 சென்னை புறநகர் ஆணையரகமாக இருந்தபோது அங்கங்கே அமைக்கப்பட்ட காவல் உதவி மையத்தில், ஒரு எஸ்ஐ, 4 காவலர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வந்தனர். அவசர காலங்களில் பொதுமக்கள் காவல் நிலையம் செல்வதற்கு பதிலாக இந்த காவல் உதவி மையங்களில் புகார் அளித்து வந்தனர். மேலும், வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை இந்த மையத்தில் பணிபுரியும் போலீசார், உடனுக்குடன் விரட்டி பிடிப்பதற்கு வசதியாக இருந்து.

இந்த உதவி  மையங்களுக்கனெ தனியாக ஒரு செல்போன் எண் ஒதுக்கப்பட்டது. இந்த நம்பருக்கு புகார் வந்த சில நிமிடங்களிலேயே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரச்னையை தீர்த்து வைப்பர். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் வருவதற்குள் பிரச்னை பெரிதாகி விடுகிறது. சில நேரங்களில் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.

எனவே, அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க, மூடிக்கிடக்கும் காவல் உதவி மையங்களை மீண்டும் திறந்து, காவல்கள் பணியில் ஈடுபட உயர் அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: