வாலிபரை கத்தியால் தாக்கிய 3 சிறுவர் உள்பட 4 பேர் சிக்கினர்

சென்னை: மெரினா கடற்கரையில்  வாலிபரிடம் வீண் தகராறு செய்து கத்தியால் தாக்கிய வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர்  இளமாறன்(23), போட்டோகிராபராக பணி செய்து வருகிறார். இவர் தனது நண்பரின் திருமணத்திற்கு போட்டோ ஷூட் எடுப்பதற்காக 6 நண்பர்களுடன் சேர்ந்து நேற்று  காலை 6.30 மணயளவில் மெரினா, நம்ம சென்னை பின்புறம் மணற்பரப்பில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (எ) தோல் ஆனந்த் வீண் தகராறு செய்துள்ளார்.

அப்போது இளமாறன் தரப்பினருக்கும் ஆனந்த் (எ) தோல் ஆனந்த் தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கையால் இருதரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் (எ) தோல் ஆனந்த் அங்கு மணற் பரப்பிலிருந்த தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு வந்து, இளமாறனிடம் தகராறு செய்து கட்டை மற்றும் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இளமாறன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்லமுறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஓரிரு நிமிடங்களில் விரைந்து சம்பவயிடத்திற்கு சென்று,  சம்பவ இடத்தில் பொதுமக்கள் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோவையும், சம்பவ இடத்தில், பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளையும் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில்  வழக்கில் சம்பந்தப்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்த ஆனந்த் (எ) தோல் ஆனந்த் மற்றும் அவருடன் வந்த 3 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: