செல்போன் கடையின் பூட்டை உடைத்து 8 லட்சம் பொருட்கள் திருட்டு: 2 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பாரேரி பகுதியில், செல்போன் கடை உள்ளது. இக்கடையை எப்போதும் போல் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு, அதன் உரிமையாளர்  வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 47 விலையுயர்ந்த செல்போன்கள், புளூடூத், ஹெட்செட் போன்ற  பொருட்களை திருடி சென்றனர். தகவலறிந்து வந்த செல்போன் கடை உரிமையாளர் கடை உள்ளே சென்று பார்த்தார். அப்போது, செல்போன் உள்பட அனைத்து பொருட்களும் திருடுபோனது தெரியவந்தது.

இப்புகாரின்பேரில், மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். அதில் போலீசார் கோயம்பேட்டில் பதுங்கியிருந்த சென்னை மூர்மார்க்கெட் அல்லிக்குளத்தை சேர்ந்த சேட்டு மகன் தாஸ் என்கிற ஆதிபகவன்(27) மற்றும் சென்னை வியாயசர்பாடி பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் அஜீத் என்கிற மிட்டாய் (20) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து செல்போன்கள் உள்பட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து, இருவரையும் செங்கல்பட்டு நடுவர்  நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: