குடிபோதை தகராறில் பயங்கரம் கத்தியால் குத்தி பழ வியாபாரி படுகொலை : நண்பர் கைது

தாம்பரம்: குடிபோதையில் நண்பரை படுகொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகிலன் (57). இவர் அதேபகுதியில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது நண்பர் வினோத்குமார் (32). இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் ஒன்றாக மது அருந்தினர். பின்னர் பேருந்து நிலையத்திற்கு வந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது இருவருக்கும் திடீரென  வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வினோத்குமார் அருகில் உள்ள கடைக்கு சென்று காய் வெட்டும் கத்தியை வாங்கி வந்து, கோகிலனை சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த கோகிலன் அலறிதுடித்தவாறு ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். வினோத்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.  பின்னர் இதுகுறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்து வந்த போலீசார் கோகிலனின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: