மாமல்லபுரம் அருகே கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு குழாய் பதிக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு குழாய் பதிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த  2003 - 2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அப்போதைய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மீஞ்சூர்,  காட்டுப்பள்ளி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிக்காடு என இரண்டு இடங்களில்  கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகக்கு கடந்த 2010ம் ஆண்டு அப்போது, துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  

இதைத் தொடர்ந்து, இந்த ஆலை கடந்த 2013ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு, நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த, இரண்டு  சுத்திகரிப்பு ஆலைகள் சென்னையின் மொத்தக் குடிநீர்த் தேவையில் 30 சதவீதத்தைப் பூர்த்தி செய்து வருகின்றன.

இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு முதலாவது ஆலைக்கு அருகே ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் ரூ.1260 கோடியில் இரண்டாவது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு, தினமும் 15 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்படும். இந்த, இரண்டாவது ஆலையில் சுத்திகரிப்பு செய்யப்படும் குடிநீர் பல்லாவரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூளேரிக்காடு இரண்டாவது ஆலைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ராட்சத கிரேன் மூலம் கடலில் குழாய் பதிக்கும் பணியில் சுமார் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: