×

கல்லூரி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் எட்டாம் வகுப்பு மாணவி!

சென்னையை சேர்ந்த 14 வயதாகும் அஷ்வதா பிஜூ, இந்தியாவின் இளம் பல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் (Palaeontologist) என்ற பெருமையைப் பெற்றுள்ளார். எட்டாம் வகுப்பு பயிலும் இவர், பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், புவியியல் மற்றும் பழங்காலவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் வகுப்புகளும் கருத்தரங்குகளும் நடத்தி வருகிறார்.

‘‘எனக்கு ஐந்து வயதிலிருந்தே கிளிஞ்சல்கள், சிப்பிகள் சேகரிப்பது ரொம்பவே பிடிக்கும். அதே வயதில், என் பெற்றோர்கள் எனக்கு வாசிப்பு பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். அதில் என் ஃபேவரைட் புத்தகம், என்சைக்லோபீடியா. அதைச் சரியாகப் படித்து புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் படங்களைப் பார்த்துப் படிக்க முயல்வேன்.

அப்போது அதில் நான் பார்த்த ஒரு தொல்பொருளை கிளிஞ்சல் என நினைத்து அதை கண்டுபிடிக்க வேண்டும் என அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா, இது கிளிஞ்சல் அல்ல, இது ஒரு புதை படிமம் எனக் கூறினார். அதை யாரும் சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாது என்றும், அது அரசாங்கத்திற்கு சொந்தமானது எனக் கூறி, என்னை எக்மோர் மீயூசியத்திற்கு அழைத்துச் சென்றார்.

அதற்குப் பின் தொடர்ந்து 10 முறைக்கு மேல் அங்குச் சென்றேன். எக்மோர் அருங்காட்சியகத்தில் நான் பார்த்த புதைபடிமங்கள் என்னை கிளிஞ்சல் சேகரிப்பதிலிருந்து, தொல்லுயிர் எச்சங்களைச் சேகரிக்கும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த வயதில் தொடங்கி, இதுவரை 140 புதை படிமங்களைச் சேகரித்துள்ளேன். சுமார் 6700 மாணவர்களுடன் தொல்லுயிரியல் குறித்து கருத்தரங்கத்தில் உரையாடியுள்ளேன்” என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் அஷ்வதா.
பெரியார் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராம்குமாரின் அறிமுகம் கிடைத்தது சிறுமி அஷ்வதாவின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

 பல புதைமடிமங்களை ஏந்தி நிற்கும் சிறுமியைப் பார்த்து வியந்த அவர், அடுத்த மூன்று மணி நேரம், புதைபடிமங்கள் பற்றிய விவரங்களை அஷ்வதாவிற்கு கற்பித்துள்ளார். மேலும், அரியலூரில் இருக்கும் காவேரி ஆற்றின் அருகே பல லட்ச வருடங்கள் பழமையான பல்லுயிர் படிமங்கள் கிடைக்கும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார். அதற்குப் பின் அஷ்வதா தன் சொந்த முயற்சியிலும், தாமாக இணையத்திலிருந்து கற்றுக்கொண்ட தகவல்கள் வழியாகவும், இதுவரை பல நூறு பல்லுயிர் புதைபடிமங்களைச் சேகரித்து, பள்ளி கல்லூரிகளில் கருத்தரங்கம் நடத்தியுள்ளார்.

‘‘புதைபடிமங்கள் மூலமாக மட்டுமே நாம் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். இந்த ஆராய்ச்சிகள் மூலம் எதிர்காலத்தில் நாம் சந்திக்கப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் அறிந்து, அந்த பாதிப்புகளைத் தடுப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட முடியும்.
எனக்குக் கடல் சார்ந்த அதன் கரையோரம் கிடைக்கும் புதைபடிமங்கள் சேகரிப்பதில்தான் அதிக ஆர்வம். இதற்காக ராஜஸ்தானில் உள்ள கோதாவரி நதிக்குச் சென்று பல்லுயிர் படிமங்களைச் சேகரித்துள்ளேன்.” என்று கூறும் அஷ்வதா கடல் வாழ் உயிரினங்கள், குறிப்பாக முதுகெலும்பு இல்லாத விலங்கினங்களைப் படித்து வருகிறார்.

‘‘பல்லுயிரியலில் பல கிளைகள் இருந்தாலும், கடல் வாழ் உயிரினங்கள் மேல் தான் என்னுடைய போகஸ் அதிகமாக உள்ளது. இதில் சில வகை உயிரினங்கள் இயற்கையாகவே சுருண்ட உடலுடன் இருக்கும், சில உயிரினங்கள் நட்சத்திர மீனைப் போல் ஐந்து கால்களுடன் இருக்கும். இப்படி பல்லுயிர் பற்றிய தகவல்களை தெரிந்துகொண்டால் புதைபடிமங்களைக் கண்டுபிடிப்பதும் சுலபமாகும்” என்கிறார்.

இந்த பெருமைக்கெல்லாம் முக்கிய காரணம் அஷ்வதாவின் பெற்றோர்கள்தான். சிறு வயதில் படிப்பைத் தாண்டி அஷ்வதாவிற்கு ஏற்பட்ட விளையாட்டான ஆர்வத்தை முடக்கிவிடாமல், தன் மகள் மீது நம்பிக்கை வைத்து ஊக்குவித்ததால் தான், இன்று அவர் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் அளவுக்கு வளர்ச்சியைத் தந்துள்ளது. ‘‘தொல்லியல் துறையில் படித்து, அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். மேலும், அனைவருமே பல்லுயிரியல் ஆராய்ச்சிகள் முக்கியத்துவத்தை அறிந்து, அதன் அடிப்படைத் தகவல்களை தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்வேன்.

மனிதர்களாகிய நாம் உருவானதற்கான வரலாறு முதல் எதிர்காலத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் தொல்லியலில் இருக்கிறது. அதை அறிந்து ஒவ்வொருவரும் மற்ற உயிரினங்களுடன் இணக்கமாக வாழ்ந்தாலே சுற்றுச்சூழலை காக்கலாம்.” என்று நம்பக்கையுடன் தன் எதிர்கால கனவினை கூறி முடிக்கிறார் அஷ்வதா பிஜூ.

Tags : Eighth grade student ,college students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...