2 தீவிரவாதிகளை துணிச்சலாக பிடித்த காஷ்மீர் கிராம மக்கள்: ஆயுதங்கள் வைத்திருந்த போதும் பயப்படவில்லை

ஜம்மு:  காஷ்மீரில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகளை, கிராம மக்கள் உயிரை துச்சமென நினைத்து மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காஷ்மீரில் இது பெரும் பரபரப்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள்  தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரியாசி மாவட்டத்தில் உள்ள துக் சான் டோக் என்ற இடத்தில் பயங்கர  ஆயுதங்களுடன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இருவர் நேற்று பதுங்கி இருந்தனர். இருவரையும் கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பயங்கர ஆயுதங்களுடன் இருந்த தீவிரவாதிகளை துணிச்சலுடன் மடக்கி பிடித்த கிராம க்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த இரண்டு பேரில் ஒருவர், போலீசால் தீவிரமாக தேடப்பட்டு வந்த மிக முக்கிய குற்றவாளி தலிப் உசேன் ஷா என தெரிய வந்துள்ளது. ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த லஷ்கர் அமைப்பின் காமண்டரான இவன், சமீபத்தில்  நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டுள்ளான். இன்னொருவன், பைசல் அஹ்மத் தர்,  புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவன். இது குறித்து ஏடிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், ‘‘போலீஸ் மற்றும் ராணுவத்தினரிடம் இருந்த தப்பிக்க  இரண்டு தீவிரவாதிகளும் அந்த கிராமத்துக்குள் நுழைந்துள்ளனர்.

2 தீவிரவாதிகளை  சுற்றி வளைத்து பிடித்த கிராம மக்களின் துணிச்சல் பாராட்டத்தக்கது.  தீவிரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது,’’ என்றார்.

ரூ.5 லட்சம் பரிசு

தீவிரவாதிகளை பிடித்துக் கொடுத்த கிராம மக்களின் துணிச்சலை பாராட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா, துக்சான் டோக் கிராம மக்களுக்கு  ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  அதே போல்,  டிஜிபி தில்பக் சிங்கும் போலீசார் சார்பில் ரூ.2 லட்சம்  பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தீவிரவாதி பாஜ நிர்வாகி?

கிராம மக்கள் பிடித்து கொடுத்த தீவிரவாதிகளில் ஒருவனான  தலிப் உசேன் ஷா, பாஜ.வின் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த மே மாதம் தலிப் உசேனை ஜம்மு பகுதி சமூக வலை தள பிரிவு தலைவராக அக்கட்சி நியமித்துள்ளது. ஆனால், ஆன்லைனில் உறுப்பினர்கள் சேர்க்கை நடப்பதால், இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படுவதாக பாஜ செய்தி தொடர்பாளர் பத்தானியா தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘ஆன்லைன் மூலம் உறுப்பினராக சேர்ந்து  கட்சியின் தலைமை அலுவலகம் வரை சென்று தீவிரவாதிகள் உளவு பார்க்கின்றனர். அதன் பின்னர், கட்சி தலைவர்களை கொல்ல சதித்  திட்டம் தீட்டுகிறார்கள். இது ஒரு புதிய பாணியாகும்,’’ என்றார்.

64% தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

தெற்கு காஷ்மீரில் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதல்களில் 59 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் வடக்கு காஷ்மீரில் 31 பேர் பலியாயினர். கடந்த 5 மாதங்களில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 64.1 சதவீதம் பேர் இளைஞர்கள்.  தீவிரவாத அமைப்பில் சேர்ந்த ஒரு வருடத்தில் இவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். 26.6 சதவீதத்தினர் 12 மாதங்களுக்கு மேல் வரை  நீடிக்கின்றனர். மீதி உள்ள 9.3 சதவீதத்தினரின் நிலைமை தெரியவில்லை என்று  பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

Related Stories: