வெளிநாடுகளுக்கு பிழைப்பு தேடி உயிரை பணயம் வைத்து தப்பும் இலங்கை மக்கள்: நடுக்கடலில் மடக்கி பிடிக்கும் ராணுவம்

கொழும்பு:  இலங்கையில் இருந்து  ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக படகில்  செல்ல முயன்ற 51 பேரை  அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. உள்நாட்டில் அவர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, அண்டை நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கடல் மார்க்கமாக உயிரை பணயம் வைத்து தப்பி வருகின்றனர். தமிழகத்துக்கும் படகு மூலமாக இதுவரை ஏராளமானோர் தப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக படகு மூலம் தப்பிச் செல்ல முயன்ற 51 பேரை,  நடுக்கடலில் இலங்கை கடற்படை மடக்கி பிடித்து கைது செய்துள்ளது. இது குறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் கடற்படை வீரர்கள் நேற்று  படகில் ரோந்து சென்றனர். அப்போது பெரிய மீன்பிடி படகில் ஒரு கும்பல் வந்து கொண்டிருந்தது.  விசாரித்த போது அவர்கள் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அதில் இருந்த 51 பேரும் கைது செய்யப்பட்டனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் ரத்தினபுரி  பகுதிகளைச் சேர்ந்தவர்கள்,’ என கூறப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் 4வது முறை

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு மக்கள் தப்பிச் செல்ல முயற்சிப்பது, கடந்த ஒரு வாரத்தில் 4வது முறையாக நடந்துள்ளது. நேற்று முன்தினம் இலங்கை மேற்கு கடற்கரை மாரவில்லா  என்ற இடத்தில்  வெளிநாடு செல்லும் திட்டத்துடன் லாட்ஜில் தங்கியிருந்த 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், கடந்த மாதம் 27, 28 தேதிகளில் 100க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: