முன்னிலை பெற்றது இந்தியா: இங்கிலாந்து 284 ரன்னில் ஆல் அவுட்

பர்மிங்காம்: இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 132 ரன் முன்னிலை பெற்றது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச, இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்தது. ரிஷப் பன்ட் 146 ரன், ஜடேஜா 104 ரன், கேப்டன் பும்ரா 31* ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 5, பாட்ஸ் 2, பிராடு, ஸ்டோக்ஸ், ரூட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்திருந்தது. பேர்ஸ்டோ (12 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (0) இருவரும் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தது. ஸ்டோக்ஸ் 25 ரன் எடுத்து ஷர்துல் பந்துவீச்சில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து பேர்ஸ்டோவுடன் சாம் பில்லிங்ஸ் இணைந்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.  பேர்ஸ்டோ 106 ரன் (140 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஷமி வேகத்தில் கோஹ்லியிடம் பிடிபட்டார். ஸ்டூவர்ட் பிராடு 1 ரன், சாம் பில்லிங்ஸ் 36 ரன் (57 பந்து, 4 பவுண்டரி), மேத்யூ பாட்ஸ் 19 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து முகமது சிராஜ் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (61.3 ஓவர்).

ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2, ஷர்துல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 132 ரன் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது.

Related Stories: