எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட அறிக்கை: 2022-2023ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான எம்இ, எம்டெக் போன்ற முதுநிலை  பொறியியல் படிப்புகளுக்கும், எம்.ஆர்க் முதுநிலை படிப்புக்குமான  தமிழ்நாடு பொது நுழைவு சேர்க்கை (TANCA) நடத்தப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும்‌ உறுப்புக கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள முதுநிலை பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, விண்ணப்பதிவு நேற்று முதல் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணைய தளம் வாயிலாக வருகிற ஆக.3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  இணைய வழியில் நிறைவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள  வேண்டும். இந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன், தேவைப்படும் சான்றிதழ்  நகல்களுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துறைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ‘‘The Director (Admissions), Anna University, Chennai  600 025’’ என்ற முகவரிக்கும், அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, ‘‘The Principal, Government College of Technology, Thadagam Road, Coimbatore  641 013’’ என்ற முகவரிக்கும், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

2022 டான்செட் நுழைவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அல்லது 2020, 21, 22 ஆகிய ஆண்டுகளில்  தொடர்புடைய பொறியியல், தொழில்நுட்ப துறைகளில் பெறப்பட்ட கேட் மதிப்பெண்கள் அல்லது 2020, 21, 22 ஆகிய ஆண்டுகளில்  தொடர்புடைய பொறியியல்/ வாழ்க்கை அறிவியல் துறைகளில் பெறப்பட்ட கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: