மாநில அணைகள் பாதுகாப்பு குழு, அணை பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் என்ன?...பருவமழைக்கு முன் பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்: நீர் நிரப்ப சான்று அவசியம்

சென்னை: மாநில அணைகள் பாதுகாப்பு குழு, நீர்வளத்துறை அணை பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் என்ன என்பது தொடர்பாக  தமிழக அரசு விரிவான வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

* அணை  பாதுகாப்புக்கான மாநில குழு  ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் மறுசீரமைக்கப்பட  வேண்டும். இந்த குழு ஆண்டுக்கு 2 முறை கூடி, பருவமழை தொடங்கும்  முன் ஒரு கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறையாக நடக்கிறது

* பருவமழை தொடங்கும் முன் அணைகளை முறையாக இயக்குவதற்கான (ஹைட்ரோ மெக்கானிக்கல்) பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

* அணைகளை முதலில் நிரப்புவதற்கு முன், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்ட அணையை பொறியாளர்கள் மூலமாகவோ அல்லது நிபுணர் குழு மூலமாகவோ ஆய்வு செய்து, ஆரம்ப கட்டத்திலேயே  ஆய்வு செய்து அதன் விரிவான அறிக்கையை தயாரிக்க வேண்டும். அணையை நிரம்புவதற்கு தகுதியை முறையாக சான்றளிக்க வேண்டும்.

* அணையின் கண்காணிப்பு, நீர் வானிலை நிலையங்கள்,  நில அதிர்வு நிலையங்களின் கருவிகளை கண்காணிக்க வேண்டும்.

* அணைகளின் மறுசீரமைப்பு, பழைய அணைகளின் மறுசீரமைப்பு தேவைகள் குறித்த பரிந்துரைகளை செய்கிறது.

* ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பராமரிக்கப்படும் அணையை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தை நடத்த வேண்டும்.

* அணைகளின் பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை மாநில அணைகள் பாதுகாப்பு குழு வழங்க வேண்டும். மேலும், அணையில் ஏதேனும் பெரிய பிரச்னைகள் அல்லது இடர்பாடுகள் காணப்பட்டால், தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு முதல் கட்ட குழுவுடன் இணைந்து அணையை ஆய்வு செய்து, பிரச்னைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

* ஒவ்வொரு மாநில அணை பாதுகாப்பு அமைப்பும், 3 மாதங்களுக்கு ஒரு முறை, அதன் செயல்பாடுகள் மற்றும் மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட அணைகளின் பாதுகாப்பு குறித்த ஆண்டறிக்கையை தயாரித்து, அத்தகைய அறிக்கையை தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில அரசுக்கு அனுப்பப்படும்.

* தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அணை பாதுகாப்பு அமைப்பு, குறிப்பிட்ட அணைகள்  கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டால், அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்.

*  மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவால்  தமிழகத்தில் உள்ள 128 அணைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.  அப்போது, அணையின் கட்டமைப்பு, அணை அடித்தளம், அணையின் மேல்நிலை நீர்நிலைகள் மற்றும் அணையின் கீழ்பகுதியில் உள்ள நிலத்தின் தன்மை அல்லது பயன்பாடு குறித்து பொறியாளர்களால் தொகுக்கப்பட்டு இறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: