நாடு முழுவதும் ரூ.10,211 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் அணைகள் புனரமைப்பு, பாதுகாப்பு திட்ட குழு சார்பில் வரும் 11ம் தேதி ஆய்வுக் கூட்டம்

* 23 மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பு

* தமிழகத்தில் முதன்முறையாக 3 நாள் நடக்கிறது

* தமிழக அரசு சார்பில் மதுரையில் ஏற்பாடு

சென்னை: நாடு முழுவதும் ரூ.10,211 கோடியில் 736 அணைகளின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக அணைகள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டக் குழு சார்பில் வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் ஆய்வுக்கூட்டம் தமிழகத்தில் நடக்கிறது. இதில், 23 நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என்று தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அணைகள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2வது கட்டமாக நாடு முழுவதும் 736 அணைகள் புனரமைக்கப்படுகிறது. இதில், மகாராஷ்டிராவில் 167 அணைகள், ஒடிசாவில் 36 அணைகள், தமிழ்நாட்டில் 59 அணைகள், தெலங்கானா 29 அணைகள், கேரளா 15 அணைகள், கர்நாடகா 58 அணைகள் உள்பட 23 மாநிலங்களில் உள்ள 736 அணைகள் புனரமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்காக ரூ.10,211 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டங்கள் 6 ஆண்டுகள் வரை செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டப்பணிகள் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, இப்பணிகள் அந்தந்த மாநில நீர்வளத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் ரூ.1,100 கோடி செலவில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 37 அணைகள், மின்சார வாரிய கட்டுப்பாட்டில் உள்ள 22 அணைகளில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீர்வளத்துறை சார்பில் முதற்கட்டமாக சாத்தனூர், சோலையாறு, மேல் நீராறு உள்பட 5 அணைகள் புனரமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மீதமுள்ள பணிகளுக்காக விரிவான அறிக்கை தயார் செய்து அரசின் நிதியுதவி பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் நடந்து வரும் இப்பணிகள் தொடர்பாக ஒன்றிய அணைகள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டக்குழு சார்பில் ஆய்வுக்கூட்டம் முதன்முறையாக தமிழகத்தில் வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. மதுரையில் நடக்கும் கூட்டத்துக்கு தமிழக அரசின் நீர்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம், மத்திய நீர்வள ஆணையம், 23 மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். உலக வங்கி குழுவினரும் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில் அணைகள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தால் அணைகளில் பாதுகாப்பு மேம்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களின் பெரிய அணைகள் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விரிவாக விளக்கப்படுகிறது. இக்கூட்டம், இதுவரை ெடல்லியில் நடந்து வந்த நிலையில் தற்போது முதன்முறையாக தமிழக அரசின் அழைப்பை ஏற்று மதுரையில் கூட்டம் நடக்கிறது என்று நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: