வியாசர்பாடியில் ஒலி மாசு குறித்து விழிப்புணர்வு

பெரம்பூர்: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் காற்று மாசு ஒலி மாசு உள்ளிட்டவை பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், தனியார் அமைப்புகள், காவல்துறை உள்ளிட்டோர் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை சிக்னல் அருகே வியாசர்பாடி போக்குவரத்து போலீசார் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து ஒலி மாசு குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, அதிகபடியான ஹாரன் ஒலிகளை ஏற்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் இதனால் காதுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்த வேண்டும். எந்த பகுதிகளில் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு பதாகைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வியாசர்பாடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரந்தாமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காசி விசுவநாதன், பாலாமணி, வேல்முருகன், மது உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் போக்குவரத்து போலீசாரால் இலவசமாக வழங்கப்பட்டன.

Related Stories: