கம்ப்யூட்டர் உதிரிபாக நிறுவனத்தில் தீ விபத்து தொழிலாளிகள் 2 பேர் உடல் கருகி பலி: ஆயிரம்விளக்கில் நள்ளிரவில் சோகம்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் கருகி பலியானகினர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலை அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ‘எஸ்கே’ பில்டிங் என்ற பெயரில் 6 அடுக்குமாடி கொண்ட கட்டிடம் உள்ளது. இதன் 2வது தளத்தில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.  இங்கு கம்ப்யூட்டர் தொடர்பான உதிரி பாகங்கள் குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று  முன்தினம் இரவு இந்நிறுவனத்தில் புதிதாக தரை விரிப்பு (மேட்) அமைக்கும் பணி நடந்தது. இதில் கோபி, சதிஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2.40 மணி அளவில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது தொழிலாளர்கள் இருவரும் நிறுவனத்தின் ஷட்ரை மூடிவிட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  

ஷட்டர் மூடப்பட்டிருந்ததால், தீ விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்த தொழிலாளர்கள் கோபி, சதீஷ் ஆகியோரால் வெளியில் வர முடியவில்லை. அவர்கள் அலுவலக அறைக்குள்ளேயே சிக்கி கொண்டனர். தீயில் கருகி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல் அலுவலக அறையில் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தது. இந்த உடல்களை மீட்ட போலீசார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தீ விபத்து நடைபெற்ற கட்டிடம் அடுக்குமாடி கட்டிடமாகும். இதன் 2வது மாடியில்தான் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: