கடந்த 2001ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை கோயில் மனைகள், கட்டிடங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்தது எப்படி? மண்டல இணை ஆணையர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கடந்த 2001ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை கோயில்களுக்கு சொந்தமான மனைகள், கட்டிடங்களுக்கு நியாய வாடகை நிர்ணயிக்கப்பட்ட விவரங்களை அனுப்பி வைக்குமாறு ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான வணிக மனைகள், குடியிருப்பு மனைகள், வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை வாடகைக்கு விடப்பட்டு வாடகை தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த இனங்களும் நியாய வாடகையை நிர்ணயிப்பது, தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை வழங்க வேண்டியுள்ளதால், ஏற்கனவே 2001ம் ஆண்டில் இருந்து 2021ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்ட நியாய வாடகை தொகை விவரங்கள் மற்றும் இதர விவரங்கள் தேவைப்படுகிறது. எனவே, மாநகராட்சிகள் வாரியாகவும், நகராட்சிகள் வாரியாகவும், பேரூராட்சிகள் வாரியாகவும், கிராமங்கள் வாரியாகவும் அனுப்ப வேண்டும். அதன்படி, மனை வணிகம், மனை குடியிருப்பு, கட்டிடம் வணிகம், கட்டிடம் குடியிருப்பு விவரங்களை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களுக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கான தகவல்களாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: