ஆன்லைனில் ரம்மி விளையாட மனைவியின் 12 பவுன் நகை திருட்டு: கணவனுக்கு போலீஸ் எச்சரிக்கை

திசையன்விளை: நெல்லை மாவட்டம், உவரி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட மனைவியின் நகையை திருடிய கோழிப்பண்ணை உரிமையாளரை போலீசார் எச்சரித்தனர். நெல்லை மாவட்டம், உவரி அருகே கரைச்சுத்துப்புதூரை சேர்ந்தவர் அந்தோனி பாபு ஜார்ஜ். குத்தகைக்கு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜார்ஜ் இருதய செல்வசோபனா(36). இவர் நேற்று முன்தினம் இரவு வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்டு பீரோவில் பூட்டி சாவியை வழக்கம் போல் வைக்கும் இடத்தில் வைத்தார். நேற்று மதியம் வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த போது ஒருவர் பிச்சை கேட்டு வந்துள்ளார். அவர் சென்ற பின் துணியை எடுப்பதற்கு பீரோவை திறந்தபோது அதிலிருந்த 12  பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை காணவில்லை. இதுபற்றி ஜார்ஜ் இருதய செல்வசோபனா, உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்தோனி பாபு ஜார்ஜ், எங்கள் நகையை கண்டுபிடித்து தாருங்கள் என்று கதறி அழுதார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பெரும் தொகை இழந்து கடனில் உள்ளதாகவும், தொடர்ந்து ரம்மி விளையாட பணம் தேவைப்பட்டதால் மனைவியின் நகையை திருடியதாகவும் ஒப்புக்கொண்டார். நகையை பிளாஸ்டிக் கவரில் வைத்து கோழிப்பண்ணையில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தார். அதனை போலீசார் மீட்டனர். அத்துடன் வீட்டிலிருந்து எடுத்த ரூ.15 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தியிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்காக சொந்த வீட்டிலேயே திருடியவரை கண்டித்த போலீசார் நகையை ஜார்ஜ் இருதய செல்வசோபனாவிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: