சேலம் அருகே மாமியாரை அடித்து கொன்ற மருமகள்: போலீசுக்கு பயந்து தற்கொலை

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே குரும்பப்பட்டி ஊராட்சி தானமுத்தியூரைச் சேர்ந்த இருளப்பன் மனைவி தைலம்மாள்(75). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். இருளப்பன் இறந்து விட்டதால், 2வது மகன் மெய்வேலுடன்(45) தைலம்மாள் வசித்து வந்தார். மெய்வேலின் மனைவி செல்வி(40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், செல்விக்கும் அவரது மாமியார் தைலம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று காலை 11 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வி, கட்டையை எடுத்து, மாமியாரை சரமாரியாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தைலம்மாள் உயிருக்கு போராடினார். இதை கண்ட மெய்வேலின் அண்ணன் மகன் ஈஸ்வரன், உடனடியாக அவரை மீட்டு இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனிடையே, மாமியார் இறந்த செய்தி ஊருக்குள் பரவியது. இதையறிந்த செல்வி, போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: