ஊட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து சென்னை பெண் இன்ஜினியர் பலி: தடையை மீறி அழைத்து சென்ற காட்டேஜ் உரிமையாளர் கைது

ஊட்டி: கல்லட்டி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து பெண் பலியானதை தொடர்ந்து தடையை மீறி அழைத்து சென்றதாக காட்டேஜ் உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து  மசினகுடி செல்ல தலைக்குந்தாவில் இருந்து கல்லட்டி வழியாக மலைப்பாதை உள்ளது. இச்சாலை குறுகிய வளைவுகள், சரிவுகள் நிறைந்த அபாயகரமான சாலையாக விளங்கி வருகிறது. இச்சாலை வழியாக ஊட்டியில் இருந்து பயணிக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வாகனங்களை முறையாக இயக்க தெரியாமல் விபத்தில்  சிக்குவதும், உயிரிழப்புகள் ஏற்படும் தொடர்கதையான நிலையில் கடந்த 2018ல் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து உள்ளூர் வாகனங்களை தவிர வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வாகனங்கள் இச்சாலை வழியாக ஊட்டியில் இருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஐடி கம்பெனி ஊழியர்கள் 18 பேர் டெம்போ வேன் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். தலைக்குந்தா - மசினகுடி சாலையில் கல்லட்டி மலைப்பாதையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் முன்பதிவு செய்திருந்த அவர்கள் நேற்று முன்தினம் இரவு ஊட்டி வந்துள்ளனர். இவர்கள் முன்பதிவு செய்திருந்த தனியார் ரிசார்ட்  உரிமையாளர் வினோத்குமார் (25) மற்றும் அவரது உதவியாளர் ஜோசப்(26) ஆகியோர் காவல்துறைக்கு தெரியாமல் புதுமந்து, மார்லிமந்து அணை வழியாக செல்லும்  குறுக்கு சாலையில் பைக்கில் முன்சென்றபடி வேனை அழைத்து சென்றுள்ளனர்.

கல்லட்டி மலைப்பாதையில் 15வது வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் முத்துமாரி (30) என்ற பெண் இன்ஜினியர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள்  நீலகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தடையை மீறி சென்னை சுற்றுலா பயணிகள் வாகனத்தை கல்லட்டி மலைப்பாதை வழியாக அழைத்து சென்றதாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ரிசார்ட் உரிமையாளர் வினோத்குமார் மற்றும் அவரது  உதவியாளர் ஜோசப் ஆகியோரை புதுமந்து போலீசார் கைது செய்தனர்.

Related Stories: