கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைகளை தத்தெடுக்க தவமிருக்கும் 16,000 தம்பதி: பற்றாக்குறையே காரணம்

புதுடெல்லி: இந்தியாவில் குழந்தையை தத்தெடுக்க விரும்பும் 16 ஆயிரம் தம்பதிகள், கடந்த 3 ஆண்டுகளாக காத்திருப்பதாக ஒன்றிய தத்தெடுப்பு ஆதார மையம் தெரிவித்துள்ளது. குழந்தைகளை தத்தெடுப்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பதிவு செய்துவிட்டு ஆண்டுக் கணக்கில் தம்பதியர் காத்திருக்க வேண்டி உள்ளது. சமுதாயத்தில் ஆதரவற்ற, புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நல்லதொரு குடும்பச் சூழலை உருவாக்கும் நோக்கில் தத்தெடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் www.cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தத்தெடுப்பதற்கு தம்பதியின் திருமணப் பதிவு, உடற்தகுதி, பணி, ஆண்டு வருமானம் மற்றும் பிறப்புச் சான்றுகள், புகைப்படம், பான் எண், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்நிலையில், தகவல் உரிமை மனுவுக்கு ஒன்றிய தத்தெடுப்பு ஆதார மையம் அளித்துள்ள தகவல்கள் வருமாறு: குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பித்த தம்பதியரில், மொத்தம் 28,501 பேரின் அறிக்கைகள் மீதான ஆய்வுகள் முடிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 16,155 தம்பதியர் குழந்தை தத்தெடுக்க கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காத்து கிடக்கின்றனர். கடந்த ஜூன் 29ம் தேதி நிலவரப்படி, 1,380 மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்பட 3,596 குழந்தைகள் சட்டப்பூர்வமாக தத்தெடுக்க தயாராக உள்ளனர். தத்தெடுப்பு மையங்களில் 7 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 2,971 குழந்தைகள் சிறப்பு தத்தெடுப்பு அமைப்புகளிடம் வளர்ந்து வருகின்றனர். இவர்கள் தத்து கொடுக்கப்படுவதில்லை என்று வகைப்படுத்தப்பட்டவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்ட சீர்திருத்தங்கள்

* கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், குழந்தைகள் தத்தெடுப்பு நடைமுறையை எளிமையாக்கும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியது.  

* கடந்தாண்டு அரசு சிறார் நீதிச் சட்டத்தை திருத்தியது. இதன் கீழ் நாட்டில் தத்தெடுப்பு செயல்முறைகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள், பொறுப்புகள் வழங்கப்பட்டன. அதற்கு முன்பு, தத்தெடுப்பு நடைமுறைகள் நீதிமன்றத்தின் கீழ் இருந்து வந்தது.

Related Stories: