மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜ வேட்பாளர் ராகுல் நர்வேகர் சபாநாயகர் தேர்தலில் வெற்றி

மும்பை: மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையில் நேற்று நடந்த சபாநாயகர் தேர்தலில், பாஜ சார்பில் போட்டியிட்ட ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றார். கவர்னர் கோஷ்யாரி உத்தரவுப்படி ஷிண்டே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்ற மோதலில் பாஜ பதவியை விட்டுத்தராததால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிருப்தி அடைந்தார். பின்னர் உத்தவ் தாக்கரே பாஜவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு அமைத்து முதல்வரானார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி சட்ட மேலவை தேர்தல் முடிந்த கையோடு ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்றார். இந்த அணி போர்க்கொடி தூக்கிய பிறகு, அரசு மீது கடந்த மாதம் 30ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அதற்கு முதல் நாளே முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால் அரசு கவிழ்ந்தது. மறுநாள் பாஜ ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக பா.ஜ தலைவர் தேவேந்திர பட்நவிஸ் பதவியேற்றார். முதலில் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என தெரிவித்த பட்நவிஸ் பின்னர் கட்சி தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக கூறினார். அன்று வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

இந்நிலையில், சபாநாயகரை தேர்வு செய்ய, மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு விதான் பவனில் துவங்கியது. சபாநாயகர் பதவிக்கு ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொலாபா தொகுதி எம்.எல்.ஏ. ராகுல் நர்வேர் (45), மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜன் சால்வி ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு நடந்தது. நர்வேக்கருக்கு 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. தேசியவாத காங்கிரசின் நர்கரி ஜிர்வால் துணை சபாநாயகர் என்பதால், அவர் வாக்களிக்கவில்லை.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நர்கரி ஜிர்வால் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சிவசேனா கட்சி எம்எல்ஏக்களில் சிலர், கட்சி கொறடா முடிவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடகி்கைகள் எடுக்கப்படும்’’ என்றார். சிவசேனா எம்எல்ஏ ஒருவர் ஏற்கெனவே இறந்து விட்டதால், மகாராஷ்டிராவில் எம்எல்ஏக்களின் மொத்த எண்ணிக்கை 287 ஆக உள்ளது. இவர்களில் 271 பேர் நேற்று வாக்களித்துள்ளனர். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ராயிஸ் ஷேக், அபு ஆஸ்மி மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ ஷேக் பரூக் ஆகிய 3 பேர் வாக்களிக்கவில்லை. இவர்களுடன் சேர்த்து நேற்று நடந்த சபாநாயகர் தேர்தலில் 12 எம்எல்ஏக்கள் வாக்களிக்கவில்லை.

சபாநாயகர் தேர்தல் நேற்று முடிந்த நிலையில், ஷிண்டே தலைமையிலான புதிய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவுப்படி இன்று நடக்கிறது. சபாநாயகர் தேர்தலில் உத்தவ்வின் சிவசேனா கட்சிக்கும் பாஜவுக்கும் இடையே நேரடி போட்டி காணப்பட்ட நிலையில், பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் ஷிண்டே அரசு வெற்றி பெறுவதற்கான முன்னோட்டமாக இதை எடுத்துக் கொள்ளலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பாஜவுக்கு 106 எம்எல்ஏக்கள், சிவசேனா அதிருப்தி அணியில் 39 வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உட்பட தங்கள் அணியில் 165 எம்எல்ஏக்கள் இருப்பதாக ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி சார்பில் தேசியவாத காங்கிரசிடம் 53, காங்கிரஸ் 44 மற்றும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் போக எஞ்சியவர்கள் உள்ளனர்.

Related Stories: