நிலச்சரிவால் அமர்நாத் யாத்திரை பாதிப்பு; ஒரே இரவில் 2 பாலத்தை சீரமைத்த ‘சினார்’ படை: யாத்ரீகர்கள் மகிழ்ச்சி

அமர்நாத்: நிலச்சரிவு ஏற்பட்டதால் 2 பாலங்கள் சேதமான நிலையில், அவற்றை ஒரே இரவில் சினார் படை சீரமைத்து மீண்டும் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. அமர்நாத் யாத்திரை என்பது இமயமலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள சிவன்  கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் யாத்திரையாகும். கொரோனா தொற்றுநோய்  காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த  ஆண்டு ஜூன் 30ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பால்டால் அடுத்த பிரரிமார்க் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் இரண்டு பாலங்கள் சேதமடைந்தன.

அதனால் அமர்நாத் யாத்ரீகர்கள் நான்கு மணி நேரம் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் பெரும்பாலான அமர்நாத் யாத்ரீகர்கள் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ‘சினார் கார்ப்ஸ்’ ராணுவ படையினர் ஒரே இரவில் இரு பாலங்களையும் கட்டமைத்து மீண்டும் யாத்ரீகர்களின் பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ளனர். இதனால் யாத்ரீகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக  ‘சினார் கார்ப்ஸ்’ ராணுவ படை  வெளியிட்ட பதிவில், ‘திடீரென மலைப்பகுதியில் வெப்பநிலை அதிகரித்ததைத் தொடர்ந்து, பால்டால் பாதையில் காளிமாதா கோயிலுக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாலங்கள் சேதமடைந்தன. உடனடியாக களத்தில் இறங்கிய ‘சினார் கார்ப்ஸ்’ ராணுவ படை, ஒரே இரவில் பாலங்களை புனரமைத்து, மீண்டும் பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இதனால் யாத்ரீகர்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: