ஸ்ரீபெரும்புதூர் அருகே கொலை சதித்திட்டத்துடன் பதுங்கியிருந்த 6 ரவுடி கைது: கத்தி, வீச்சரிவாள் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கொலை சதித்திட்டத்துடன் வீட்டில் பதுங்கியிருந்த 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களிடம் இருந்து கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம் அண்ணா நகரை சேர்ந்தவர் விஜய் (26). பிரபல ரவுடி. இவர் மீது ஆந்திராவில் ஒரு கொலை வழக்கும், திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியில் ஒரு கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்ற  செயல்களில் ஈடுபட்ட விஜயை போலீசார்  தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் விஜய், ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக அவரது வீட்டில் நண்பருடன் திட்டம்தீட்டி வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விஜய் வீட்டுக்குள் அதிரடியாக சென்று நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரை பார்த்ததும் வீட்டின் பின்புறம் எகிறிகுறித்து காட்டுப்பகுதிக்கு சென்று தலைமறைவானார்கள். இதையடுத்து போலீசார்  காட்டுப்பகுதியில் சோதனை நடத்தியபோது, 6 வீச்சரிவாள், 4 மான் கொம்பு, ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றினர்.

விஜய் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், விஜய் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதையடுத்து, விஜய் மற்றும் அவரது கூட்டாளிகளான வளர்புரம் கைப்புள்ள (எ) ஞானப்பிரகாஷ் (21), ஸ்ரீபெரும்புதூர் பகுதி சேர்ந்த சுரேஷ் (எ) குயிக் சுரேஷ் (25), திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் பகுதி சேர்ந்த அன்பு (எ) அன்பரசன் (25), மேவலூர்குப்பம், கிறிஸ்துவ கண்டிகை பகுதி சேர்ந்த டேவிட் (எ) டேவிட்சன் (25), மப்பேடு அடுத்த உளுந்தை பகுதியை சேர்ந்த நாகராஜ் (24) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து கத்தி மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து  அவர்களிடம் விசாரித்தபோது கொலை சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரையும்  ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ரவுடி கும்பல் வீட்டில் பதுங்கியிருந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: