வில்லிவாக்கத்தில் பரபரப்பு; தனியார் கெமிக்கல் கம்பெனியில் தீவிபத்து: ஊழியர் படுகாயம்

அம்பத்தூர்: தனியார் கெமிக்கல் கம்பெனியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில்  தனியார் கம்பெனியுடன் குடோன் உள்ளது.  இங்கு டைல்ஸ் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் தயாரிக்கப்படுகிறது. இந்த கம்பெனியில் 50க்கும் மேற்பட்டோர்  வேலை செய்து வருகின்றனர். இதுபோல் வில்லிவாக்கம் 54வது தெருவை சேர்ந்த  கீர்த்திவாசன் (21) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை  வழக்கம்போல் கீர்த்திவாசன் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கமிக்கல் தீ பற்றி எரிய துவங்கியது. இந்த தீ மளமளவென கம்பெனி முழுவதும் பரவியது. இதனால் சக ஊழியர்கள் அலறியடித்துகொண்டு வெளியில் ஓடிவந்தனர்.  இதில் பலத்த தீக்காயங்களுடன் கீர்த்திவாசன்  வெளியில் ஓடிவந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கீர்த்திவாசனை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிபத்தில் கெமிக்கல் பேரல்கள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து  தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள்  கம்பெனியில் கொளுந்துவிட்டு எரிந்த தீயை 2 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிபத்தில் கம்பெனியில் இருந்த இயந்திரங்கள் உட்பட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. கம்பெனியில் ஏற்பட்ட தீவிபத்தில் சூழ்ந்த புகை மண்டலத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: