தொழிலதிபரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்: புதுகை அருகே பரபரப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் சந்திரசேகர்(64). தொழிலதிபரான இவர் மகன் மணிகண்டனுடன் வசித்து வருகிறார். இவர் 50க்கும் மேற்பட்ட பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் கீரனூர் பகுதியில் வீடுகள் வாடகைக்கு விட்டுள்ளார்.

இவர் தினமும் அதிகாலை நடைபயிற்சி செல்வது வழக்கம். அதே போல் நேற்று அதிகாலை 5 மணிக்கு சந்திரசேகரன் செல்போனை வீட்டில் இருந்து புறப்பட்டு நடைபயிற்சி சென்றார். நாஞ்சூர் பிரிவு ரோட்டில் சென்றபோது அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. நடைபயிற்சி சென்ற தந்தையை காணாத மகன் மணிகண்டன் கீரனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தனிப்படை அமைத்து சந்திரசேகரை தேடினர்.

இந்நிலையில் மதியம் 12 மணியளவில் ஒரு தொலைபேசியில் இருந்து மணிண்டனை தொடர்பு கொண்ட சந்திரசேகர், நான் கடத்தப்பட்டேன். இவர்கள் யார் என்று தெரியவில்லை. ரூ.70 லட்சம் பணத்தை தயார் செய் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இந்த தகவலை மணிகண்டன் போலீசாருக்கு தெரிவித்தார்.

அந்த தொலைபேசி எண்ணை போலீசார் ட்ரேஸ் செய்தபோது அது லெட்சுமணன்பட்டியை சேர்ந்தது என்று தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த கடத்தல்காரர்கள் சந்திரசேகரை திருச்சி மாவட்டம் பெரியசூரியூரில் விட்டு சென்று விட்டனர். போலீசார் அங்கு சென்று சந்திரசேகரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சந்திரசேகர் என்னை கடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. காலையில் என்னை பிடித்து போலீஸ் என்ற போர்டு வைத்திருந்த சொகுசு காரில் ஏற்றினர். பின்னர் என் கண்களை கட்டிவிட்டு ஒருவருக்கு போன் செய்து சார் கடத்திவிட்டோம் என்று சொல்லிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றனர். இதனால் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து தங்கள் விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படையினர், கடத்தல் தொடர்பாக களமாவூர் கிராம நிர்வாக அலுவலர் மயில்வாகனன், பிரபாகர், தெட்சிணாமூர்த்தி, நவீன், சூர்யா, ஐயப்பன், தொழிலதிபர் சந்திரசேகரின் ஓட்டுனர் ராஜ்குமார் ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய அச்சை உள்பட 2பேரை  தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சந்திரசேகரன் வீட்டில் விஏஓ மயில்வாகனன் வாடகைக்கு இருந்து பின்னர் வீட்டை காலி செய்திருக்கிறார். அப்போது மயில்வாகனன் கொடுத்த அட்வான்சை சந்திரசேகர் திருப்பி தரவில்லை. மேலும், அவரிடம் கார் டிரைவராக இருந்த ராஜ்குமாருக்கு சம்பள பாக்கியும் வைத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் கூட்டாளிகளுடன் சந்திரசேகரை கடத்தி சென்றுள்ளனர். போலீஸ் பிடி இறுகியதும் அவரை விடுவித்துள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.  கைதான 7 பேரையும் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related Stories: