வி.ஏ.ஓ. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; மாநில செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை

நாகர்கோவில்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு விழா ஆகியவை நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது.  மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் நாகேஸ்வர காந்த் வரவேற்றார். மாவட்ட தலைவர் செந்தில்குமார், துணைத் தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் பி.எஸ். மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில பொது செயலாளர் சுரேஷ், மாநில பொருளாளர் முத்துச்செல்வன்,மாநில நிர்வாகிகள் நல்லா கவுண்டன், விஸ்வநாதன், ராஜரத்தினம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்.

நகர நில அளவை பட்டா மாறுதல் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் காலியாக உள்ள 800 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை இந்த அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.   

கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அரசினுடைய அனைத்து நலத்திட்ட உதவிகளும், திட்டங்களும் கிராம நிர்வாக அலுவலர் மூலமாகத்தான் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே கிராம நிர்வாக அலுவலர்களுடைய கோரிக்கைகளை இந்த அரசு கனிவுடன் நிறைவேற்றித் தர வேண்டும் என்றார்.

Related Stories: