திசையன்விளையில் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து

திசையன்விளை: திசையன்விளை பேரூராட்சி குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் வைத்த தீயினால் ரூபாய் 2 கோடி 80 லட்சம் மதிப்பிலான குப்பை கிடங்கு எரிந்து நாசமானது. திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான உரப்பூங்கா சாத்தான்குளம் சாலையில் உள்ளது. இங்கு பேரூராட்சி பணியாளர்கள் நாள் தோறும் திசையன்விளை பஜார் மற்றும் தெருக்களில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை டிராக்டர், லாரிகளில் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

அவ்வாறு சேமித்து வைத்த குப்பைகளை மக்கும், மக்கா குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், சணல் சாக்குகள், காய்கறி கழிவுகள், சிரட்டைகள் என பல்வேறு பிரிவுகளாக பயோ டெக்னிக் என்னும் நவீன தொழில்நுட்பம் மூலம் தரம் பிரிப்பர். 5 வருடங்களாக சேமித்த குப்பைகளை நவீன தொழில்நுட்ப முறையில் தரம் பிரிக்க சமீபத்தில் 2 கோடி 80 லட்சம் ரூபாய்க்கு தனிநபர் ஒருவர் டெண்டர் மூலம் ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்பு பணியினர் தீயை அணைக்க போராடினர். குப்பைகள் முழுவதும் எரிந்து நாசமான நிலையில் தற்போது அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. குப்பை கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்பு முழுவதும் பரவிய புகையினால் சுவாச கோளாறு போன்ற சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது

Related Stories: