சிசிடிவி கேமரா, டிஜிட்டல் தகவல் பலகை, கூடுதல் உறுப்பினர் அட்டைகள் நவீனமயமாகும் உழவர் சந்தைகள்; நெல்லையில் தோட்டக் கலை கூடுதல் இயக்குநர் ஆய்வு

நெல்லை: நெல்லை மகாராஜநகர் உழவர் சந்தை டிஜிட்டல் தகவல் பலகை, சிசிடிவி கேமரா, விவசாயிகளுக்கு கூடுதல் உறுப்பினர் அட்டைகள் என நவீனமயமாகிறது. இதற்காக தோட்டக் கலைத் துறை கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன் உழவர்சந்தையில் நேற்று ஆய்வு நடத்தினார். நெல்லை மாவட்டத்தில் மகாராஜநகர், மேலப்பாளையம் மற்றும் கண்டியப்பேரி உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இதில் மகாராஜநகர் உழவர்சந்தையில் தினமும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் உழவர் சந்தைகளில் கூட்டம் அலைமோதும்.

இதை கருத்தில் கொண்டு புதிதாக என்ஜிஓ காலனியிலும் உழவர் சந்தை புதிதாக அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் உழவர்சந்தைக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்து தோட்டக்கலை மற்றும்  மலைப்பயிர்கள் துறையின் கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன் நெல்லையில் நேற்று ஆய்வு  செய்தார்.  அப்போது உழவர் சந்தையை சுற்றி உள்ள கிராமங்களில் காய்கறிகளின் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு அருகிலுள்ள பீடர்  கிராமங்களில் காய்கறி சாகுபடி பரப்பை அதிகரிக்கவும்,  நுகர்வோர்களின் வருகையை அதிகரிக்கவும் தேவையான அளவு உழவர் சந்தை அடையாள அட்டைகளை வழங்க ஆலோசனை வழங்கினார்.

அதிகளவு காய்கறி கொண்டு வருதல், உழவர் சந்தையின் சுகாதாரத்தை சீர்படுத்த தண்ணீர் வசதி, காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டை வழங்குதல், காய்கறிகளின் விலைப்பட்டியலை மின்னனு பலகையில் ஒளிப்பரப்புதல் மற்றும் தோட்டக்கலை துறையின் மூலம் தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தியாகும் நாற்றுக்கள், ஒட்டுகன்றுகள், பதியன்கள், உயிர் உரங்களான  டிரைக்கோடெர்மா, விர்டி, பேசில்லஸ், சூடோமோமனஸ் போன்றவற்றை விற்பனை செய்ய ஏதுவாக உழவர் சந்தையில் தோட்டக்கலை விற்பனை மற்றும் தகவல் மையம் தொடங்குவதற்கு தோட்டக்கலை துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் சந்தையில்,  காய்கறி உற்பத்தி செய்து, வியாபாரம் செய்யும் விவசாய பிரதிநிதிகளையும் நுகர்வோர்களில் சில பிரதிநிதிகளையும், அழைத்து அவர்களின் குறைகளையும் கூடுதல் இயக்குநர் கேட்டறிந்தார். சந்தையை மிகவும் சுகாதார முறையில் பராமரிக்கவும், சந்தையில் நடைபெறும் திருட்டை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தவும் அறிவுறுத்தினார்.

அப்போது தோட்டக்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள் இளங்கோ, தேவி சியமாளா, ஜீனத் பேகம், உழவர்சந்தை நிர்வாக அலுவலர் பாப்பாத்தி, ஆனந்த், உதவி அலுவலர்  வினட்  கமலநேசன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை ஆனந்தகுமார்,  உதவி வேளாண்மை அலுவலர்கள் திருமுருகன்,   உத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: