இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; பேட்டிங்-பந்துவீச்சு இரண்டிலும் பும்ரா கலக்கல்: இன்று வேகங்கள் அசத்தினால் வெற்றி நிச்சயம்

பர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா தொற்று பரவலால் தள்ளிவைக்கப்பட்டது. இந்த போட்டி நேற்று முன்தினம் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கில் 17, புஜாரா 13, விகாரி 20, விராட் கோஹ்லி 11, ஷ்ரேயாஸ் ஐயர் 15 ரன் என அனைவரும் நடையை கட்டினர். இதனால் இந்தியாவும் 98 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தவித்தது.

அப்போது ஆபத்பாந்தவனாக களமிறங்கிய ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் நேர்த்தி மற்றும் அதிரடியால் ரன் வேகம் அதிகரித்தது. ரிஷப் பன்ட் 111 பந்துகளில் 20 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 146 ரன்களை குவித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக விளையடி 183 பந்நுகளில் 13 பவுண்டரிகளுடன் சதம் எடுத்து அசத்தினார். கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில்  4 பவுன்டரி, 2 சிக்சர்களுடன் 35 ரன்களை விளாசி டெஸ்ட் போட்டிகளில் உலக சாதனைப்படைத்தார். இறுதியில் இந்தியா 416 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் லீஸ் 6, ஜாக் கிரௌலி 9 ஆகியோர் இந்திய கேப்டன் பும்ராவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். தொடர்ந்து ஒல்லி போப் 10 ரன்னில் நடையைக் கட்டினார். அவரது விக்கெட்டையும் பும்ராதான் கைப்பற்றினார். அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 31 ரன் முகமதுசிராஜ் பந்துவீச்சில் வீழந்தார். இதையடுத்து வந்த, நைட் வாட்ச்மேன் ஜாக் லீச் ரன் எதுவும் எடுக்காமல் முகமதுஷமியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது பேர்ஸ்டோ 12 (47), பென் ஸ்டோக்ஸ் 0 (4) ஆகியோர் களத்தில் இருந்தபோது 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தற்போது 84 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியாவைவிட 332 ரன்கள் பின் தங்கி உள்ளது.

மழை குறுக்கிட்டுள்ளதால், பிட்ச் முழுக்க முழுக்க வேகத்திற்கு சாதகமாக மாற அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை இங்கிலாந்து அணியை 3வது நாளான இன்று இந்தியா 215 ரன்களுக்குள் சுருட்டிவிட்டால் பாலோ ஆனை பெற்றுவிட முடியும். அது நடந்தால் இந்திய அணி இந்த டெஸ்டில் அபார வெற்றிபெற வாய்ப்பு அதிகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த போட்டியை பொறுத்தமட்டில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா ஒரு ஓவரில் குவித்த 35 ரன்களும், முதல் இன்னிங்சில் தற்போது வரை அவர் 3 விக்கெட் எடுத்ததும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இன்றும் பும்ராவுடன் ஷமி, முகமதுசிராஜ், ஷர்குல்தாகூர் ஆகியோர் ஆக்ரோஷமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தியாவின் வெற்றியை தடுக்க முடியாது என்பது உறுதி.

Related Stories: