மராட்டிய சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நார்வேகர் தேர்வு.! 164 வாக்குகளை பெற்று வெற்றி

மும்பை: மராட்டிய சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நார்வேகர் வெற்றி பெற்றுள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டப்பேரவையில் 164 வாக்குகளை பெற்று மராட்டிய சபாநாயகராக ராகுல் நார்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜன் செல்வி தோல்வியுற்றார்.

மராட்டியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. கடந்த புதன்கிழமை உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து மறுநாளே புதிய அரசு அமைந்தது. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி பதவி ஏற்றார். பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார். இதன்படி பா.ஜனதா ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி அணி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது.

புதிய அரசு அமைந்துள்ளதை தொடர்ந்து, கடந்த 1¼ ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள சபாநாயகர் தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்கவும் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் மும்பை கொலபா தொகுதி எம்.எல்.ஏ. ராகுல் நர்வேக்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுநாள் வரை ஆளும் கட்சிகளாக இருந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தரப்பும் திடீரென பொது வேட்பாளரை அறிவித்தது. அவர்கள் சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜன் சால்வியை வேட்பாளராக களமிறக்கி இருந்தனர்.

இவர் ரத்னகிரி மாவட்டம் ராஜாப்பூர் தொகுதியை சேர்ந்தவர். இவரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடிய மராட்டிய சட்டசபையில் புதிய சபாநாயகராக ராகுல் நர்வேக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளர் ராகுல் நர்வேகருக்கு ஆதரவாக 164 வாக்குகளும், எதிராக 107 வாக்குகளும் பதிவானது. இதனைத்தொடர்ந்து ஜெய் பவானி, ஜெய் சிவாஜி, ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் கோஷங்களுக்கு மத்தியில் மராட்டிய சட்டசபையின் சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேக்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related Stories: