திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பில் கழிவறை, நகர்நல மையம் கட்டும் பணி; கலெக்டர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.65 லட்சம் மதிப்பில் கழிவறை மற்றும் நகர் நல மையக்கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் மூலதனமானியத் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள் கட்டும் பணி மற்றும் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நகர் நல மையகட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கழிவறையானது 180 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்திய வடிவமைப்பில் தலா 6 எண்ணிக்கை கழிப்பிடமும், மாற்றுத்திறனாளி ஆண், பெண்ணுக்கு தலா 2 எண்ணிக்கை கழிப்பிடமும் மற்றும் 2 எண்ணிக்கை குளியலறையும் என மொத்தம் 16 கழிப்பிடம் மற்றும் 2 குளியலறை கொண்டதாக வடிவகைப்பட்டு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று 15வது நிதிக்குழுமானியம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நகர்நலமையக் கட்டிடமானது 80சதுர மீட்டரில் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்தில் சிகிச்சை அளிப்பதற்கான அறை, யோகா செய்வதற்கான அறை, மேலும் இரண்டு கூடுதல் அறைகள் மற்றும் கழிப்பிடத்துடன் கூடிய குளியலறை ஆகிய வசதிகளுடன் கூடிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இக்கட்டுமான பணிகளை தரமானதாகவும், குறித்த காலத்திற்குள் விரைவாகவும் முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் புவனப்பிரியாசெந்தில், துணைத்தலைவர் அகிலாசந்திரசேகர், கமிஷ்னர் பிரபாகரன், மேலாளர் முத்துக்குமார், நகர்மன்ற நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: