குரங்கு மேடு கிராமத்தில் 25 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும்; பழங்குடியின கிராம மக்கள்

குன்னூர்: குன்னூர் அருகே உள்ள குரங்கு மேடு பழங்குடியின கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், சாலை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உலிக்கல் பஞ்சாயத்துக்குட்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியையொட்டி மேல் குரங்கு மேடு பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு குரும்பர் இனத்தை சேர்ந்த 6 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

தேயிலை விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில், மின்சார வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி கிடையாது. இவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீருக்கு சுமார் 2 கிமீ சென்று தலை சுமையாக சுமந்து வரும் நிலை உள்ளது. வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் மாலை 6 மணிக்கு மேல் வீட்டைவிட்டு யாரும் வெளியே வருவதில்லை.

மேலும் வீட்டிற்கு செல்ல நடைபாதை வசதி கூட இல்லாமல் கரடு முரடான பாதையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் செல்போன்களை சோலார் மூலம் சார்ஜ் செய்து வருகின்றனர். ஆனால் பல முறை அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டாலும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரவில்லை என்று கிராம மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து அடிப்படை வசதிகளும் போர்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: