சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 26 செயற்கை நீரூற்றுகள்: வெளிநாடுகளில் உள்ளதைப்போல் ரம்யமான காட்சி; சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கின்றனர்

சென்னை: சென்னை மாநகரை சர்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுபடுத்தும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 26 வண்ணமயமான செயற்கை நீரூற்றுகள் பொதுமக்களை கவர்ந்துள்ளது.

 முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக இருந்தபோது சென்னையை அழகுபடுத்தும் விதமாக சிங்கார சென்னை என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் மேம்பாலங்கள், சிறிய பாலங்கள், பூங்காக்கள், நீரூற்றுகள், கடற்கரைகளை அழகுப்படுத்துதல், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை செய்ய திட்டமிடப்பட்டன.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தற்போது சென்னை மாநகரம் சர்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுபடுத்தப்பட்டிருக்கும். ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து மீண்டும் ஆட்சி மாற்றம் காரணமாக அடுத்தக்கட்ட பணிகள் முடங்கியது. இந்த திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டம் என்றே சொல்லலாம். எனவே தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.

இதற்காக, முதல் கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் புதிய சாலைகள் போடுவது, பாலங்கள் கட்டுவது, சுவரொட்டிகளை நீக்கி, வண்ண ஓவியம் வரையப்பட்டு வருகிறது. அதேபோல், புதிய பூங்காக்கள் அமைப்பது, கடலோர பூங்காக்கள் அமைப்பது, சென்னை கடற்கரைகளை சுற்றுலா தலமாக மாற்றும் ப்ராஜக்ட் ப்ளூ என்ற திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன் போன்ற வெளிநாடுகளில் மக்களை வெகுவாக கவர்வது வண்ணமயமான செயற்கை நீரூற்றுகள் தான். அந்த அளவுக்கு பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். இந்த செயற்கை நீரூற்றுகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் அதிகமாக இருக்கும். அங்கு செல்லும் போது இந்த நீரூற்றுகள் அருகில் நின்று, பலர் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.

இப்படிப்பட்ட செயற்கை நீரூற்றுகள் மூலம் சென்னை மாநகரை அழகுப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த நீரூற்றுகள் எல்லாம் கடந்த ஆட்சி காலத்தில் வெறும் தண்ணீர் மட்டும் பீச்சி அடிக்கும் வகையில் இருப்பதோடு நிறுத்தி விட்டனர். அவைகளையும் பராமரிக்காததால், பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் பார்ப்பதற்கே பரிதாப நிலையில் அந்த நீரூற்றுகள் இருந்தது. அவற்றை எல்லாம் பராமரித்து புத்துயிர் ெகாடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.29 கோடி மதிப்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 26 செயற்கை நீரூற்றுகளை உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது, சென்னையின் முக்கிய பகுதிகளான எண்ணூர் விரைவு சாலை சைக்லோன்‌ வெல்டர்‌ அருகில்‌, மணலி 200 அடி சாலை சந்திப்பு,  ஜி.என்‌.டி சாலை மூலக்கடை சந்திப்பு, 200 அடி சாலை எம்‌.ஆர்‌.எச்‌ சாலை ரவுண்டானா (டிராபிக்‌ ஐலேன்ட்‌), பாந்தியன்‌ சாலை, மாண்டியத்‌ சாலை மற்றும்‌ ஆர்‌.கே.லட்சுமிபதி சாலை சந்திப்பு, ராஜாஜி சாலை என்‌.எஸ்‌.சி போஸ்‌ சாலை சந்திப்பு, பெரம்பூர்‌ நெடுஞ்சாலை (வடக்கு) முரசொலி மாறன்‌ பூங்கா, பெரம்பூர்‌ பாலம்‌ தெற்கு, ஸ்டாரன்ஸ்‌ சாலை புதிய மண்டலம்‌ அருகில்‌ என மொத்தம் 26 இடங்களில் இந்த வண்ணமயமான செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வெகுவாக ரசிக்கின்றனர். பொதுமக்களை கவரும் இந்த செயற்கை நீரூற்றுகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட செயற்கை நீரூற்றுகள் மூலம் சென்னை மாநகரை அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

* வண்ணமயமாக ஜொலிக்கும்...

இந்த செயற்கை நீரூற்றுகளில் இரவு நேரத்தில் வண்ண வண்ண மின் விளக்குகளை பொருத்தி ஒளிரவிட்டு ரம்யமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. இதனை பொதுமக்கள் வெகுவாக ரசித்தவாறு செல்கின்றனர். தற்போது இந்த பணிகள் முடிவடைந்து சோதனை அடிப்படையில் தினமும் ஒளிரவிட்டு வருகின்றனர். வெளிநாடுகளுக்கு இணையாக இந்த செயற்கை நீரூற்றுகள் வண்ணமயமாக ஜொலிப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கின்றனர்.

* காற்று மாசு குறையும்

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த செயற்கை நீரூற்றுகள் காற்று மாசு ஏற்படுவதை குறைக்கும். மேலும், வாகன இயக்கத்தால் ஏற்படும் தூசி, துகள்கள் மற்றும் மாசுபாட்டை குறைக்கும். தொடர்ந்து தண்ணீர் தெளிப்பதால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, தூசி உறிஞ்சப்படும். இந்த அலங்கார நீரூற்றுகளில் இரவு நேரத்தில் வண்ண வண்ண மின் விளக்குகளை பொருத்தி ஒளிரவிட்டு ரம்யமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறது,’’ என்றனர்.

Related Stories: