தொழிலதிபர் மீது வழக்கு ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த தொழிலதிபர் பிரபு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள என்னுடைய கம்பெனி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 4 கார்களை ஸ்ரீபெரும்புதூர்  போலீசார் கடந்த பிப்ரவரி 5ம் தேதி சோதனை செய்தனர். அப்போது, கார்களில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அந்த கார்களையும், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்தனர். இது வேண்டுமென்றே என் மீது போடப்பட்ட பொய் வழக்காகும். போலீசார் என் கம்பெனி வளாகத்திற்குள் வந்து கார்களை பறிமுதல் செய்யும் வீடியோ பதிவு உள்ளது.

எனவே, என் மீதான பொய் வழக்கை ரத்து  செய்ய வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி  என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வீடியோ பதிவை நீதிபதியிடம் போட்டு காண்பித்தார். அரசு தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ பதிவை பார்க்கும் போது இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க விரும்பவில்லை. வீடியோ பதிவில் சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்து சிலர் மனுதாரரின் கம்பெனி வளாகத்திற்குள் வருகின்றனர்.

எந்த சோதனைகளும் நடத்தப்படவில்லை. எனவே, இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி, போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடுகிறேன். காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு இந்த வழக்கை முழுவதுமாக விசாரிக்க வேண்டும். வீடியோ பதிவுகளை பெற்று அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோ பதிவு மாற்றப்பட்டிருந்தால் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 மாதங்களில் இந்த விசாரணையை முடிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: