தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கு முன்னாள் காவல் உதவி ஆணையர் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன்

சென்னை: தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையர், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சொத்துகளை அபகரித்ததாக கடந்த 2019ம் ஆண்டு டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார், கடந்த 2021 ஜூன் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார் காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் 3 காவலர்கள், ஆந்திர தொழிலதிபர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் என 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆந்திர தொழிலதிபர் வெங்கட சிவநாககுமார், கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த காவல் உதவி ஆணையர் சிவகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சவுகத் அலி, நந்தகுமார், சரவணகுமார் என மொத்தமாக ஐந்து பேரை ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதில் கடந்த 10ம் தேதி நண்பருடைய வீட்டில் தலைமறைவாக பதுங்கி இருந்த காவல் ஆய்வாளர் சரவணணை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர் மேலும் அவரை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவகுமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இந்த வழக்கில் சிவகுமார் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: