சீமானுடன் சேர்ந்து நடிகையை மிரட்டிய வழக்கில் சிக்கியவர் கடனை திருப்பி கேட்டவரை பீர் பாட்டிலால் தாக்கி கொல்ல முயற்சி: நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவன தலைவர் கைது

கோபி:  கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை உறவினர்களுடன் வந்து பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவன தலைவர் சதீஸ்குமார் என்கிற சதா நாடார் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோபி அருகே திங்களூர் கீழேரிபாளையத்தை சேர்ந்தவர் பிரதீப் (33). டிவி மெக்கானிக். இவரிடம் கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே ஆதியூர் வட்டாலபதியை சேர்ந்த  சதா நாடார் என்கிற சதீஸ்குமார் (36), ரூ.10 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. சதா நாடார் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் என்ற கட்சி நிறுவன தலைவராக உள்ளார். அவரிடம் வட்டி, அசல் தொகையை பிரதீப் திருப்பிக் கேட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 29ம் தேதி பிரதீப்,  கொடிவேரி அணை அருகே பைக்கில் சென்றார். அங்கு சதா நாடார் மற்றும் கருங்கல்பாளையத்தை சேர்ந்த உறவினர்கள் பாலாஜி பிரபு (30), தினேஷ் (32) ஆகியோர் அவரை வழிமறித்து அடித்து உதைத்து, பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் பிரதீப் படுகாயம் அடைந்தார். அந்த வழியே வந்தவர்கள் அவரை மீட்டு கோபி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து 3 பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் சதா நாடார் கேரளாவுக்கு தப்ப உள்ளதாக தகவல் கிடைத்தது. உஷாரான போலீசார் கோவை மதுக்கரையில் காரில் சென்ற சதா நாடாரை கைது செய்தனர். பாலாஜி பிரபுவும் கைது செய்யப்பட்டார். தினேசை தேடி  வருகின்றனர். கைது செய்யப்பட்ட சதா நாடார் ‘ல்தகா சைஆ’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக  நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் நீதிமன்றம் முன்பு திரண்டனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட சதா நாடார் மீது ஏற்கனவே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சேர்ந்து, திரைப்பட நடிகை விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கு, ஈரோடு மாவட்டத்தில் அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், சென்னையில் பல வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: