சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்

புதுடெல்லி: ‘நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளது,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டமாக பேசியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: இந்த ஆண்டு இந்தியா 75வது சுதந்திர தின விழா கொண்டாடுகிறது. இந்தியா குடியரசு ஆகி 72 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியிருந்தும் அரசியலமைப்பின்படி ஒவ்வொரு அமைப்புக்கும் வழங்கப்பட்ட பணிகள் குறித்து நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை.

ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நீதி அமைப்புகளின் ஒப்புதலை பெற வேண்டியது தங்களின் உரிமை என நினைக்கின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளோ தங்கள் நலனையும் அரசியல் செல்வாக்கையும் விரிவுபடுத்துவதற்காகவும் நீதிமன்றங்கள் பயன்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றன. அரசியல் சட்டம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் குறித்து மக்களிடமும் போதுமான புரிதல் இல்லை. பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததை பயன்படுத்தியே, இதுபோன்ற சக்திகள் சுதந்திரமான அமைப்பான நீதித்துறையை கீழே தள்ளிவிட வேண்டும் என்று நினைக்கின்றன. நீதிமன்றங்கள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

* அமெரிக்காவை பின்பற்ற இந்தியாவுக்கு அறிவுரை

தலைமை நீதிபதி ரமணா மேலும்  பேசுகையில், ‘‘பல தரப்பட்ட மக்களை வரவேற்பதாலும், அவர்களை ஊக்குவிப்பதாலும் அமெரிக்காவுக்கு ஏராளமான இந்தியர்கள் வருகின்றனர். மக்களின் சகிப்புத்தன்மை மற்றும் உள்ளடக்கிய சிறப்பியல்புகளால் உலகம் முழுவதிலும்  இருந்து திறன் வாய்ந்தவர்கள் வருகிறார்கள். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை சர்வதேச அளவிலானது. இதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பின்பற்ற  வேண்டும்’’ என்றார்.

Related Stories: