காற்றில் கலந்து வரும் காலன் மண்ணை தொட்டதும் மரணம்: பிறந்த 30 நாளில் ஒரு லட்சம் குழந்தைகள் பலி; ஆண்டுக்கு ஆண்டு குறையும் இந்தியர்கள் ஆயுள்

ஒரு காலத்தில் அனைத்து இடங்களிலும் குடிநீர் இலவசமாக கிடைத்தது. காலப்போக்கில், வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகரங்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, கிராமங்களிலும் கூட பணம் கொடுத்து குடிநீரை மக்கள் வாங்கி வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால், ‘தூய காற்றை’ விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நிலைமை என்னவாகும்? தற்போது அந்த நிலையை நோக்கி பல நகரங்கள் சென்று கொண்டு இருக்கிறது என்பதுதான் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதிகம் மாசு கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, டெல்லி, பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. காற்று மாசு அதிகரித்தால் மனிதர்களின் ஆயுட்காலம் குறையும் என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி, ‘தூய காற்றை’ விலை கொடுத்து வாங்க வேண்டிய காலம் வந்தாலும் ஆச்சரியமில்லை. விழிப்புணர்வு இல்லை உலகம் முழுவதும் காற்று மாசு, மனிதர்களை அச்சுறுத்தும் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆய்வுகள், மனித குலத்தை அச்சுறுத்தும் புள்ளி விவரங்களை வெளிப்படுத்தி வருகின்றன; மக்களுக்கு எதிர்கால எச்சரிக்கைகளை தந்து கொண்டிருக்கின்றன.

ஆய்வு முடிவுகளின் சில உதாரணங்கள் இதோ...

* காற்று மாசுவால் கருவில் வளரும் சிசுள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

* இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 வயது வரை குறையும்.

* உலகளவில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 2.2 ஆண்டு குறையும்.

* ஆண்டுக்கு 46 லட்சம் பேர் சுவாச பிரச்னை காரணமாக இறக்கின்றனர்.

* 2019ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 1,16,000 பச்சிளம் குழந்தைகள் பிறந்து ஒரே மாதத்தில் இறந்துள்ளன.

இந்த பாதிப்புகளுக்கும், மனித குலத்தின் படிப்படியான அழிவுக்கும் வழி வகுப்பது வேற்றுகிரக வாசிகள் அல்ல. மக்களின் சுயநலமான செயல்களும், பேராசையும்தான் காரணம். இயற்கையுடன் ஒன்றி வாழும் தன்மையை எப்போது மக்கள் இழந்தார்களோ, அப்போதே அழிவும் ஆரம்பமாகி விட்டது. காற்று மாசு அதிகரித்தால், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நாளும் மரண வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோயால் பாதிக்கப்படக் கூடும். நுரையீரல் பாதிப்பு, இருதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. நகரங்களில் மட்டும் காற்று மாசு அதிகரித்த நிலையில், கிராமங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு இல்லாதது தான். நகரம், கிராமங்களில் எரிக்கப்படும் குப்பைகள், விவசாயிகள் எரிக்கும் பயிர்க் கழிவுகள், பருவநிலை மாற்றத்தால் எரியும் காடுகள், அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை போன்றவையே காற்று மாசு அதிகமாக முக்கிய காரணங்கள் ஆகின்றன. தனி நபர் ஒவ்வொருவரும் முயன்றால் மட்டுமே காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும். முக்கியமாக, மக்கள் பொது வாகனங்களை பயன்படுத்த துவங்கினால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். உயிர் வாழ தேவையான காற்றின் மீது அனைவருக்கும் அக்கறை வேண்டும்.

* பேட்டரி வாகனம்

பெரிய நகரங்களில் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகைதான் காற்று மாசுக்கு முக்கிய காரணமாகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 72 சதவீதம் காற்று மாசு டீசல், பெட்ரோல் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் ஏற்படுகிறது என்று ஒன்றிய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு இரண்டு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க, பேட்டரி வாகனங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருகிறது. பொது போக்குவரத்துக்கும் மக்கள் மாற வேண்டும்.

* ஒத்துழைப்பு தேவை

காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இவ்விஷயத்தில் வெற்றி பெற முடியாது. அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். உயிர்வாழ தேவையான காற்றின் மீது ஒவ்வொருவருக்கும் மிகுந்த அக்கறை வேண்டும். காற்று மாசால் தவித்து வரும் டெல்லியை போல், பிற நகரங்களும் சிக்கி விடக்கூடாது. காற்று மாசு அதிகரித்து கொண்டே சென்றால், அடுத்த தலைமுறையினர் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே, நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய திட்டம் ஒன்றை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* 2வது இடத்தில் இந்தியா

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக் கழகம் காற்றின் தரம், மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகத்திலேயே மிக மோசமாக மாசடைந்த பகுதி என்பது தெரியவந்துள்ளது. அதிக மாசு கொண்ட நாடுகளில் வங்கதேசம் முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன.

தப்பிக்க சில வழிமுறைகள்

* பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தினால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதன் மூலம் காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வரலாம். காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

* தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ‘காற்றின் தரத்தை’ அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். திடீரென காற்று மாசு அதிகரித்தால், அதற்கான காரணத்தை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தூய காற்றின் தோழனான மரங்களை அதிகளவில் வளர்க்க வேண்டியது மிக அவசியம். ஒவ்வொருவரும் மரங்களை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

* காற்று மாசுபாடு குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகளவில் நடத்த வேண்டும்.

டெல்லி மக்கள் மொத்த ஆயுளில் 10 ஆண்டு காலி

* உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி டெல்லி, பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில்தான் மிக மோசமான காற்று மாசு பிரச்னை உள்ளது.

* தற்போதைய நிலை தொடர்ந்தால் டெல்லி மக்களின் ஆயுட் காலம் 10.1 ஆண்டுகள் குறையும்.

* உத்தரப் பிரதேச மக்களின் ஆயுட் காலம் 8.9 ஆண்டுகளும், பீகார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும். - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

* 6 வகையான மாசு

மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பொருத்து, காற்று மாசு 6 வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:

புள்ளிகள்    பாதிப்பு

0-50    மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது;  பாதுகாப்பானது

51-100    மிதமான பாதிப்பை ஏற்படுத்தும்

101-150    நோயாளிகள் உடல் நலனுக்கு தீங்கானது

151-200    ஆரோக்கியமான மக்களின் உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்கும்

201-300    மக்களின் உடல் நலனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்

301-500    மிக மிக அபாயகரமானது.

* நாட்டிலேயே அதிகப்பட்சமாக டெல்லியில் 382 முதல் 400 புள்ளிகள் வரை பதிவாகி உள்ளது.

Related Stories: