மேற்கு நாடுகளின் மீதான கோபத்தை உக்ரைன் மக்கள் மீது காட்டும் ரஷ்யா: குடியிருப்புகளை தாக்குவதன் பின்னணி

கீவ்: உக்ரைனுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் வகையில் உக்ரைனில் உள்ள அப்பாவி மக்கள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. நேட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 5வது மாதமாக தொடரும் இந்த போரால், உக்ரைனின் பெரும்பாலான வளங்கள் அழிந்து விட்டன. அதன் முக்கிய பொருளாதாரம் நாசமாகி விட்டது. ஏற்றுமதி, இறக்குமதிக்கான முக்கிய துறைமுகமாக கருதப்படும் மரியுபோல் நகரம் ரஷ்யா கைவசம் சென்றுவிட்டது. இதேபோல், கருங்கடல் ஒட்டி உள்ள 90 சதவீத பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைனை ஒன்றும் இல்லாத நாடாக மாற்றி, அவர்களை சரணடைய வைப்பதே ரஷ்யாவின் குறிக்கோள்.

தற்போது, நேட்டோவில் உக்ரைன், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் இணைவது கிட்டதிட்ட உறுதியாகி உள்ளது. இந்த போரில் உக்ரைன் வெற்றி பெற வேண்டும் என்று அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வாரி வழங்கி வருகின்றன. இதை பயன்படுத்தி ரஷ்யாவுக்கு கடும் பதிலடியை உக்ரைன் கொடுக்கிறது. இதேபோல், ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அவர்கள் 2வது மிகப்பெரிய  வர்த்தகமான தங்கத்தை இறக்குமதி செய்ய ஜி-7 நாடுகள் தடை விதித்துள்ளன.

இதனால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்யா, இந்த நாடுகளை எச்சரிக்கும் வகையில், தனது கோபத்தை உக்ரைன் மக்கள் மீது காட்டி வருகிறது. இங்குள்ள குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. கடந்த வாரம் உக்ரைன்  தலைநகர் கீவ் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த வணிக வளாகத்தின்  மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒடேசாவுக்கு அருகிலுள்ள கடலோர நகரத்தில் குடியிருப்புகள் மீது ரஷ்யா குண்டு வீசியதில் 2 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஹைபர்சோனிக் ஏவுகணை போன்ற நவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன.

* மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘உக்ரைன் தலைநகர் கீவ் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல், ஐரோப்பிய வரலாற்றில் நடந்த பயங்கரமான தீவிரவாத தாக்குதல்களில் ஒன்று’ என்று கூறியுள்ளார்.

Related Stories: