ஐதராபாத்தில் பிரமாண்ட ஏற்பாடு கரீப் கல்யாண் திட்டம் பாஜ செயற்குழு தீர்மானம்: பேரணியில் இன்று மோடி பேச்சு

ஐதராபாத்: ஐதராபாத்தில் நேற்று நடந்த பாஜ தேசிய செயற்குழு கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை ஆதரித்தும், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாஜ கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. தற்போது பாஜ கட்சி தென் மாநிலங்கள் மீது குறி வைத்துள்ள நிலையில், இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஐதராபாத் முழுவதும் முக்கிய இடங்களில் பாஜ கட்சி மற்றும் பிரமதர் மோடி குறித்த கட் அவுட்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கூட்டத்தில், ஒன்றிய அமைச்சர்கள், 19 மாநில முதல்வர்கள், பாஜ முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் என 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் நடக்கும் ஐதராபாத் பாஜ தலைமையகத்திற்கு வந்த தலைவர்களுக்கு கிராமிய நடனக் கலைஞர்களின் பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக ஐதராபாத் பழைய விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, புதுச்சேரி ஆளுநர் தமிழசை சவுந்திரராஜன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வரும் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை ஒருங்கிணைக்கும் திட்டம் குறித்தும், கட்சியின் பிரசார நடவடிக்கைகளை முடுக்கிவிடவும், பூத் அளவில் அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், இன்று நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அடுத்த ஆண்டு தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இம்மாநிலத்தில் பாஜ தனது பிரசாரத்தை இப்பொதுக் கூட்டம் மூலம் தொடங்க உள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த செயற்குழுவில் அக்னிபாத் திட்டத்தை ஆதரித்தும், 10 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கவும், ஏழைகள் நலவாழ்வு திட்டமான ‘கரீப் கல்யாண்’ திட்டத்தை முழு வீச்சில் அமல்படுத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* மோடியை மீண்டும் புறக்கணித்த கேசிஆர்

தெலங்கானா முதல்வரான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) சமீபகாலமாக தீவிர பாஜ எதிர்ப்பாளராகி உள்ளார். பிரதமர் மோடியை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். இதன் காரணமாக, ஐதராபாத் வந்த பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் சந்திரசேகரராவ் வரவில்லை. இதன் மூலம், அவர் தனி மனிதரை அவமதிக்கவில்லை, அரசியலமைப்பையே அவமதித்துள்ளார் என்றும், அரசியலமைப்பு நெறிமுறையை சந்திரசேகர ராவ் சீர்குலைக்கிறார் என்றும் பாஜ தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

Related Stories: