கண்டலேறுவில் இருந்து ஆக.31ம் வரை நீர் திறப்பு

சென்னை: சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து 2.67 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு வந்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து கடந்த மே 5ம் தேதி  காலை 9 மணியளவில் 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் ஆந்திர அரசு சார்பில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட ஒப்புதல் அளித்து இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே கிருஷ்ணா நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில்,  பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1542 மில்லியன் கன அடியாகவும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 134 மில்லியன் கன அடியாகவும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில்  3048 மில்லியன் கன அடியாகவும், 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3279 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை 429 மில்லியன் கன அடி என மொத்தம் 5 ஏரிகளில் 8432 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: