ஜனாதிபதி தேர்தலில் தமிழக எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிக்க ஏற்பாடு: சட்டப்பேரவை செயலாளர் விளக்கம்

சென்னை: தமிழக எம்பி, எம்எல்ஏக்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை, சட்டமன்ற பேரவை செயலக வளாகத்தில் உள்ள ‘குழு கூட்ட அறையில்’ காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலை நடத்த சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் சட்டமன்ற பேரவை செயலக இணை செயலாளர் சாந்தி ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் எவரேனும் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க விரும்பினால், அதனை ‘படிவம்-ஏ’ வாயிலாகவும் அல்லது பிற மாநில சட்டமன்ற பேரவை செயலக வளாகத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க விரும்பினால், அதனை ‘படிவம்-பி’ வாயிலாகவும், நியாயமான காரணங்களுடன் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை சென்றடையும் வகையில்”சுமன் குமார் தாஸ், செயலாளர், நிர்வச்சன் சதன், அசோகா சாலை, புதுடெல்லி 110 001” என்ற முகவரிக்கு நேரிடையாக அனுப்பி வைக்க வேண்டும். (மின்னஞ்சல்: skdas@eci.gov.in / president-cell@eci.gov.in). இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தங்கள் விருப்பத்தினை தெரிவித்த பின்னர், அதுவே இறுதியானது என்பதால் அதனை மாற்ற ஆணையம் அனுமதிக்காது. எம்எல்ஏக்கள் வாக்களிக்க வரும்போது அவர்களுடைய அடையாள அட்டையை உதவி தேர்தல் அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: