2ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள்: நிர்வாகம் தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்ட வழித்தடம் 3ன் கீழ் மாதவரம் பால் பண்ணை முதல் தரமணி வரை 21 கி.மீ சுரங்கப்பாதை வழித்தடம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மே மாதம் வழங்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வேணுகோபால் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை செலுத்தும் பகுதியில் இருந்து கெல்லீஸ் மெட்ரோ ரயில் நிலையம் வரை 9 கி.மீ நீளத்திலான இரட்டை சுரங்கப்பாதைஅமைகிறது.

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கான எஸ் 96 மற்றும் எஸ் 97 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்ட சீனாவின் டெராடெக் தொழிற்சாலையில் தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் 6.6 மீ விட்டத்தை கொண்டும் நில அழுத்த சமன்பாடு முறையிலான இயந்திரங்கள் ஆகும். இவை கட்டம் இரண்டில் திட்ட பகுதியில் உள்ள மாறுபட்ட நில அமைப்பிற்கு பொருத்தமாக உள்ளது. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவரம் பால்பண்ணை நிலையத்திலிருந்து தபால் பெட்டி நிலையத்தை நோக்கி சுரங்கம் தோண்டும் பணிகள் வரும் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்படும்.

இதேபோல், இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவரம் நெடுஞ்சாலையிலிருந்து தபால் பெட்டி நிலையத்தை நோக்கி நவம்பர் மாதம் மேற்கொள்ளப்படும். இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில இந்தியாவிலும் எஞ்சியவை சீனாவிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் சீனாவில் இருந்து சென்னை மாதவரம் பால்பண்ணைக்கு கடந்த மாதம் 30ம் தேதி வந்து சேர்ந்தது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை மாதவரம் பால்பண்ணையில் இருந்து செலுத்துவதற்கான ஆயத்த பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: