அதிமுக பொதுக்குழுவின் இறுதி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருந்தால் ஓபிஎஸ்சை ஒற்றை ஆளாக பார்க்கும் அவசியம் ஏற்பட்டு இருக்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: அதிமுக பொதுக்குழுவின் இறுதி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருந்தால், ஓ.பன்னீர்செல்வத்தை இப்படி ஒற்றை நபராக பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூறினார். பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரவுபதி முர்மு நேற்று தமிழகம் வந்து அதிமுக, பாமக, பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு கேட்க வந்தார். இந்த நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்தில ஓட்டலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழு தான் இறுதி அதிகாரம் படைத்தது. பொதுக்குழுவில்  கலந்துகொண்டு, பொதுக்குழு எடுத்த முடிவுக்கு ஓபிஎஸ் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அவர் ஏன் கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டுக்கு போகாமல் பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு இருந்தால், இன்று அதிமுக கட்சியில் எந்த பிரச்னையும் இருக்காது. அதனால் இப்போது என்னாச்சு? ஒருங்கிணைப்பாளர் பதவியே காலாவதியாகி விட்டது. உள்ளாட்சி தேர்தலில், கட்சி அங்கீகார கடிதம் கொடுப்பதற்கு கடந்த 27ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆனால், 30ம் தேதி ஓபிஎஸ் சொல்கிறார். கட்சியில் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறார். பொதுக்குழுவின் இறுதி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருந்தால், இப்படி தனியாக பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: