சென்னை வந்த பாஜ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே சந்தித்து ஆதரவு: பாமக, பாஜ எம்பி, எம்எல்ஏக்களிடம் வாக்குகளை சேகரித்தார்

சென்னை: பாஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று சென்னை வந்தார். அவரை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியே சந்தித்து அதிமுக சார்பில் ஆதரவு தெரிவிப்பதாக கூறினர். பாமக, பாஜ எம்பி, எம்எல்ஏக்களையும் சந்தித்து ஆதரவு கோரினார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன்படி, யஷ்வந்த் சின்கா 30ம் தேதி சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கேட்டார். அவருக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு நேற்று காலை புதுச்சேரி வந்தார். அங்கு அவர் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜ எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

தொடர்ந்து தமிழகத்தில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 65 எம்எல்ஏக்கள், 6 மாநிலங்களவை, ஒரு மக்களை எம்பிக்களின் ஆதரவை பெறுவதற்காக ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வர திட்டமிட்டிருந்தார். தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ போடும் ஓட்டின் மதிப்பு, 176  வாக்குகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரிடமும் திரவுபதி முர்மு வாக்கு சேகரிப்பதற்காக வந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியை கைப்பற்றுவதில் இருவரும் நீதிமன்றம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு மேல் மனு போட்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், ஜனாதிபதி வேட்பாளர் முர்மு நேற்று சென்னை வந்தார். அப்போது அவரை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் ஒரே நேரத்தில் வரவேற்று, தங்கள் ஆதரவை தெரிவிப்பார்களா? என்பதில் சிக்கல் எழுந்திருந்தது. தமிழகத்தில் 65 அதிமுக எம்எல்ஏக்களில், 62 எம்எல்ஏக்கள் ஆதரவு எடப்பாடிக்கு உள்ளது. மேலும் 3 எம்பிக்களின் ஆதரவும் உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் பக்கம் அவரும், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகிய 3 எம்எல்ஏக்களும், ரவீந்திரநாத்,  தர்மர் ஆகிய 2 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், ஜனாதிபதி வேட்பாளர் முர்மு நேற்று மாலை சென்னை வந்தார். எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் ஒரே மேடையில் ஆதரவு தெரிவிப்பார்களா என்ற பரபரப்பு நிலவியது. குறிப்பிட்ட நேரத்தில் பாஜவின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஓட்டலுக்கு வந்திருந்தனர். அதே போல ஓபிஎஸ், இபிஎஸ் வந்திருந்தனர். இபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் விழா நடைபெறும் அரங்கில் அமர்ந்திருந்தார். ஆனால், ஓபிஎஸ் விழா மேடை அரங்கிற்கு வராமல் ஓட்டலில் தனது ஆதரவு எம்எல்ஏ, எம்பிக்களுடன் தனி அறையில் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு மாலை 4.05 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார்.

ஓட்டலில் அவரை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். வரவேற்பை முடித்து கொண்டு திரவுபதி முர்மு விழா மேடைக்கு வந்தார். முதல் ஆளாக அங்கு மேடைக்கு வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் சென்று ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தார். அதுவரை ஓபிஎஸ் விழா நடைபெறும் இடத்துக்கு வரவில்லை. ஓட்டலில் உள்ள அறையில் தனது ஆதரவு  எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் இருந்தார். எடப்பாடி பழனிசாமி ஆதரவு  அளித்து விட்டு சென்ற பிறகே, ஓபிஎஸ் விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்.

சுமார் 2 மணி நேரம் கழித்து தான் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏ, எம்பிக்களுடன் வந்து திரவுபதி முர்முவுக்கு தனது ஆதரவை தெரிவித்து சால்வை, பூங்கொத்து  கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு ஓட்டலுக்கு வந்த பின்னரும், இரண்டு பேரும் ஒருவரை  ஒருவர் நேரில் சந்தித்து பேசவில்லை. அதே நேரத்தில் எடப்பாடி இருக்கும் வரை விழா நடைபெறும் இடத்திற்கு ஓபிஎஸ் வரவில்லை. ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது இதன் மூலம் உறுதியாகி விட்டது. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஆதரவு தெரிவிக்க வந்தால் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படக்கூடும் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பாஜவினர் கருதினர். இதைத் தொடர்ந்தே எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கேமணி, பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் எம்எல்ஏக்கள், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர்  ஏ.சி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து தங்களுடைய ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து சென்னை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மாலை 6.20 மணிக்கு திரவுபதி முர்மு டெல்லி புறப்பட்டு சென்றார்.

Related Stories: