கரூரில் நடந்த விழாவில் 80,750 பேருக்கு ரூ.500 கோடி நல உதவி வழங்கினார் மு.க.ஸ்டாலின்: ரூ.581 கோடியில் புதிய பணிகளுக்கும் அடிக்கல்

கரூர்: கரூரில் நடந்த விழாவில் 80 ஆயிரத்து 750 பயனாளிகளுக்கு ரூ.500 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.581 கோடியில் புதிய பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். கரூர் திருமாநிலையூரில் நேற்று புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.581 கோடியே 44லட்சம் மதிப்பில் 99 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.28 கோடியே 60 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை துவங்கி வைத்தும், 80,750 பயனாளிகளுக்கு ரூ.500 கோடியே 83லட்சம் மதிப்பிலான பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசியதாவது: அங்கன்வாடி மையங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிய சாலைப்பணிகள், சாலை மேம்பாடு பணிகள் என எண்ணற்ற பணிகள், இதனை ஊர் வாரியாக சொன்னால் நேரம் பத்தாது. ஒட்டு மொத்தமாக ஒவ்வொரு பகுதியிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டின் சாதனைக்கு சாட்சியாக இவைகள் உள்ளது.

முதலில் ஆட்சிக்கு வருபவர்களிடம் மக்கள் முதல் ஆறு மாதத்துக்கு எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். அடுத்த ஆறு மாதத்தில் கேள்விகள் எதிர்பார்ப்பார்கள். அடுத்தடுத்து 6 மாதங்கள் செயல்பாடுகள் அதிகமாகும். ஆனால், ஆட்சிக்கு வந்த நொடிக்கு நொடி செயல்பாடுகளை மட்டுமே நாங்கள் செய்துள்ளோம். கலைஞர் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் என்ன நினைத்தாரோ அதனை நினைத்து நினைத்து செயல்படுத்தி வருகிறேன். தேர்தல் சமயத்தில் தந்த வாக்குறுதிகள் பலவற்றை ஒரு ஆண்டில் நிறைவேற்றியுள்ளோம். கரூரை மாநகராட்சியாக்குவோம் என்றோம், புகளூர், பள்ளபட்டியை நகராட்சியாக மாற்றுவோம் என்றோம். அரவக்குறிச்சியில் கலைக்கல்லூரி கொண்டு வரப்படும் என்றோம். அதனை நிறைவேற்றியுள்ளோம்.

கருவூர் பின்னால் கரூர் ஆனது. 95 வயது வரையிலும் கலைஞர் தமிழ் சமுதாயத்திற்கு பாடுபட்டார். அவரை முதன் முதலில் எம்எல்ஏவாக ஆக்கியது இந்த கரூர் மாவட்டம்தான். இந்த கூட்டத்தில் ஒரு கோரிக்கை வைக்கிறேன். மாநிலத்தில் தொழில்களில் முன்னேறி வரும் மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் ஒன்றாக உள்ளது. கரூர் ஜவுளி, கொசுவலை, கூண்டு கட்டும் பணி போன்றவற்றில் முதன்மையாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் மேலும் வளர்ந்து திருப்பூர் மாவட்டத்திற்கு இணையாக வர வேண்டும் என்பது எனது ஆசை. இதனை நிறைவேற்றித் தருவீர்களா?. மாவட்டங்களுக்குள் ஆரோக்கியமான தொழில் போட்டி இருக்க வேண்டும். இதற்கு இந்த திராவிட மாடல் ஆட்சி துணையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் அமைச்சர்கள்  கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, சிவசங்கர், கரூர் எம்பி ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

* விவசாயிகளுடன் கலந்துரையாடல்

முதல்வராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின், முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு நேற்றுமுன்தினம் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகையில் இரவு தங்கினார். நேற்று காலை 8.30 மணி முதல் 9.15 மணி வரை முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாய சங்க  பிரதிநிதிகள் மற்றும் வேளாண் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 50 விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர். பத்து, பத்து விவசாயிகளாக அழைத்து  கலந்துரையாடினார். இதில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன், கோரிக்கை மனுவையும் முதல்வரிடம் அளித்தனர்.  

* 24 இடங்களில் மக்கள் திரண்டு வரவேற்பு

கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து விழா நடைபெறும் திருமாநிலையூர் மைதானம் 5 கி.மீ தூரமாகும். இந்த வழித்தடத்தில் காளியப்பனூர், தாந்தோணிமலை, மில்கேட், சுங்ககேட், திருமாநிலையூர் உள்பட 24 இடங்களில் சாலையின் இருபுறமும் பெண்கள், கட்சியினர், விவசாயிகள் என  சுமார் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு நின்று முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

* வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த ஓராண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு செய்திருக்கக்கூடிய சாதனைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் பார்க்கும்போது நான் மனநிறைவை அடைகிறேன். ஒவ்வொருவருக்கும் அவரது மனச்சாட்சிதான் நீதிபதி என்று சொல்லுவார்கள். அந்த வகையில் எனது மனசாட்சி அளிக்கும் தீர்ப்பு இது. இதுதான் மக்களுடைய மனங்களிலும் இருக்கிறது என்பதன் அடையாளம் தான் உங்கள் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

இந்த முகங்களின் மூலமாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது. அதனால்தான் நான் வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் அக்கப்போர் மனிதர்களின் அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதற்கு தயாராக இல்லை. அதற்கு நேரமில்லை. “மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட போராடலாம். ஆனால் மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் நாம் போராடவே முடியாது” என்று தந்தை பெரியார் சொல்வார். அடிக்கடி சொல்வார். அப்படி மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மனிதர்கள் வைக்கும் விமர்சனத்தைப் பற்றி நான் மதிக்க விரும்பவில்லை.

தி.மு.க. ஆட்சி எப்படிச் செயல்படுகிறது என்பதை இதுபோன்ற மனிதர்கள் முன்னால் மைக்கை நீட்டாமல், மக்களிடம் சென்று உங்கள் மைக்கை நீட்டிப் பாருங்கள். பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், நகைக்கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி குறித்து பெண்கள் சொல்வார்கள்.  ‘நான் முதல்வன் திட்டம்’ குறித்து இளைஞர்களிடம் கேளுங்கள். நரிக்குறவ இனத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களிடம் இந்த ஆட்சியை பற்றி கேளுங்கள். தூர்வாரும் பணிகள் குறித்து விவசாயிகளிடம் கேளுங்கள். சமூக நீதி பாதுகாப்பது குறித்து சமூக நீதியாளர்களிடம் கேளுங்கள். நியாயமான கோரிக்கைகளை யார் சொன்னாலும் நிறைவேற்றித் தருவோம். நான் கோடிக்கணக்கான மக்களின் விளக்காக இருக்க விரும்புகிறேன். அறிவு, அன்பு, சேவை விளக்காகவும்  இருக்க விரும்புகிறேன். முதல்வர் நாற்காலியை எனக்கு வழங்கிய உங்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என்றார். மானத்தை பற்றிக் கவலைப்படாத

மனிதர்கள் வைக்கும் விமர்சனத்தைப் பற்றி நான் மதிக்க விரும்பவில்லை.

* நாமக்கல்லுக்கு வருகை தந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பொம்மைகுட்டைமேட்டில், கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று (3ம்தேதி) நடைபெறுகிறது. இந்த மாநாட்டை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில், நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்திவேலூருக்கு கரூரில் இருந்து காரில் வந்தார். அங்கு அவருக்கு மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.15 மணியளவில், கிழக்கு மாவட்ட எல்லையான கீரம்பூர் டோல்கேட் பகுதிக்கு முதல்வர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி., தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர். பொதுமக்களும், கட்சியினரும் எழுச்சியுடன் அங்கு திரண்டு வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சுமார் 13 கிமீ தொலைவுக்கு, சாலையின் இருபுறமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், திமுகவினர் திரண்டிருந்து, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்தனர்.

Related Stories: