பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்: 12,000 தனிநபர் நிறுவனங்களுக்கு கடன் உதவி மானியம் வழங்கிட திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2020-21 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.  

இத்திட்டத்தின் கீழ் 2020-21 முதல் 2024-25 வரையிலான 5 ஆண்டுகளில் 12,000 தனிநபர் நிறுவனங்களுக்கு கடன் உதவி மானியம் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அளவில் இத்திட்டத்தினை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயல்படுத்துகின்றது.

    

01.07.2022 அன்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர், முனைவர். ச. நடராஜன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மாவட்ட முதன்மை  வங்கி மேலாளர்கள்,  மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்கள்  (வேளாண் வணிகம்), ஒன்றிய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்  அமைச்சகத்தின் பிரதிநிதி மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருடன் திட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திட்டத்தின் முக்கிய இனங்கள், செயலாக்க முறை, வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகள் போன்றவை எடுத்துரைக்கப்பட்டது. இத்திட்டத்தில்  தனிநபர் மற்றும் குழுக்களுக்கு வழங்க உள்ள கடனுதவி மற்றும் கடன் பெறும் முறையினை  பயனாளிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குமாறு  இயக்குநர் கேட்டுக்கொண்டார்.

இத்திட்டம் மாநிலம் முழுவதும் நல்லமுறையில் செயல்படுத்துவதுடன் நடப்பு இலக்கான 3942 தனிநபர் நிறுவனங்களை நிறுவுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், வங்கிகளால் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி மறுபரிசீலனைக்கு உட்படுத்தி கடன் வழங்கிட வழிவகை செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

வேளாண்மை துணை இயக்குநர்கள் மாவட்ட முதன்மை வங்கி மேலாளர்களுடன் இணைந்து பணியாற்றி இலக்கினை அடைந்திட வலியுறுத்தினார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பயனாளிகளுக்கும் வங்கி அலுவலர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக பணியாற்றிட அறிவுரை வழங்கினார்.

Related Stories: